சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (13) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அது விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகள் இலங்கையின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எரிபொருளின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தினர்.
தமது அமைப்பு ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறையை கடைபிடித்துள்ளதாகவும், அதன்படி விண்ணப்பித்துள்ளதாகவும் இலங்கை அரசாங்கத்திற்கு பிரதிநிதிகள் தெரிவித்தனர். அரசாங்கத்தினால் மத்திய எரிசக்தி மையமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டையில் சுத்திகரிப்பு நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு முழு நிதியுதவி வழங்குவதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மேலும், நாட்டின் அபிலாஷைகளுடன் ஒத்துப்போகும் எதிர்கால கோரிக்கைகளுக்கு பதிலளிக்க தங்கள் நிறுவனம் தயாராக இருப்பதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விநியோகம் குறித்தும் அவர்கள் தமது யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தைத் தொடர்ந்து விரைவான அபிவிருத்தியை இலங்கை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நாட்டிற்குள் செயற்படுவதற்கு வெளிநாட்டு வர்த்தகங்களை ஊக்குவிக்கவும் ஈர்க்கவும் தனது விருப்பத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க வெளிப்படுத்தினார்.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி திரு சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் திரு சமன் ஏக்கநாயக்க, திறைசேரி செயலாளர் திரு மஹிந்த சிறிவர்தன, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் திரு. மாபா பத்திரன மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர். (NW)
No comments