நமது ஜனநாயகத்தை காப்பாற்ற ஒன்றிணைந்து சர்வாதிகார அரசை வீழ்த்த வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே காங்கிரசின் நோக்கமாக இருக்க வேண்டும். நாட்டில் மாற்று அரசை அமைக்க அயராது உழைக்க வேண்டும். புதிய பிரச்சினைகளை கொண்டுவந்து முக்கியமான அடிப்படை பிரச்சினைகளில் இருந்து மக்களை மோடி அரசு திசை திருப்புகிறது.
சமீபத்தில் மும்பையில் இந்தியா கூட்டணி கட்சி கூட்டம் நடந்த போது, மோடி அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய குழுவை அமைத்தது. அனைத்து மரபுகளுக்கும் முரணாக இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதி சேர்க்கப்பட்டுள்ளார். நமது தனிப்பட்ட நலன்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஓய்வின்றி நாம் உழைக்க வேண்டும். மேலும், நமது தனிப்பட்ட வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியின் வெற்றியை முன்னிலைப்படுத்த வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்ற இந்த சர்வாதிகார அரசை துடைத்தெரிய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் ' என்றார்.
No comments