இலங்கைக்கு எதிரான சுப்பர் 4 போட்டியில் 41 ஓட்டங்களால் வென்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாழ்வா, சாவா ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (14) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சுப்பர் 4 புள்ளிப்பட்டியலில் இந்திய அணியின் வெற்றியுடன் அந்த அணி 4 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்ததோடு பங்களாதேஷ் அணி முதல் இரு போட்டிகளிலும் தோற்றதால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் இந்தப் புள்ளிப் பட்டியலில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 2 புள்ளிகளுடன் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் காணப்படுகின்றன.
இதனால், கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டி ஆசிய கிண்ணத் தொடரின் அரையிறுதி ஆட்டமாக மாறியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.
எனினும் கொழும்பில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புள்ளிப் பட்டியலில் நிகர ஓட்ட விகிதம் முக்கிய பங்காற்றுவதாக உள்ளது. இதில் இலங்கை அணியின் நிகர ஓட்ட விகிதம் -0.200 என பாகிஸ்தானின் நிகர ஓட்ட விகிதத்தை விடவும் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவிடம் 228 ஓட்டங்களால் மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியின் நிகர ஓட்ட விகிதம் -1.892 என பின்தங்கியுள்ளது.
எனவே இன்றைய போட்டிக்கு மேலதிக தினம் ஒதுக்கப்படாத நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் இலங்கை அணிக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புக் கிடைக்கும்.
ஆசிய கிண்ண இறுதிப் போட்டி ஒன்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதுவரை சந்தித்ததில்லை என்பதோடு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் எட்டு தடவைகள் சந்தித்த நிலையில் இந்தியா ஐந்து போட்டிகளிலும் இலங்கை மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன.
இம்முறை ஆசிய கிண்ண இறுதிப் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு செப்டெம்பர் 18 ஆம் திகதி மேலதிக தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் உபாதைக்கு உள்ளாகி இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.
மறுபுறம் இலங்கை அணி வலுவான இந்திய துடுப்பாட்ட வரிசையை 213 ஓட்டங்களுக்கு சுருட்டிய நிலையில் அந்த குறைந்த வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போனது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கு குசல் ஜனித் பெரேரா அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது. (தினகரன்)
No comments