கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (24) மு.ப. 8.30 மணி அளவில் நாடு திரும்பியுள்ளனர்.
கியூபாவில் நடைபெற்ற ‘ஜி77 + சீனா’ அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த செப்டெம்பர் 13ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டார்.
செப்டெம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற ‘G77 + சீனா’ அரச தலைவர்கள் மாநாட்டில் (G77+China Leaders’ Summit) ‘தற்போதைய அபிவிருத்தி சவால்களில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு’ எனும் தலைப்பில் அவர் உரையாற்றியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் திகதி அதிகாலை அவர் நியூயோர்க் நகரை சென்றடைந்தார்.
அதன் பின்னர் அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றியிருந்தார். (தினகரன்)
No comments