Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

பல ஊக்குவிப்புக்களை மேற்கொள்ள டயனா கமகே எதிர்பார்ப்பு

இலங்கையின் நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும் என சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.


அத்துடன் இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி ஊடக அமைச்சில்  நேற்று (27.09.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சுற்றுலாத்துறையில் சமையல் கலை நிபுணர்களை மறந்துவிட முடியாது என்பதால் அவர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டமொன்றும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் ஆரம்ப பகுதியில் 10 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.


இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் பேரை வரவழைக்க முடியும் என எதிர்பார்ப்பதுடன் அதற்காக விசேட ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

வருடத்தின் இறுதி காலப்பகுதியிலேயே நாட்டுக்கு சுற்றுலாப் பிரயாணிகளில் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருமளவான சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.


அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டிற்கு அழைத்து வர எதிர்பார்த்திருக்கும் நிலையில், அடுத்த மாதத்தின் இடைப்பகுதியிலிருந்து அவர்களை வரவழைப்பதற்கான ஊக்குவிப்புத் திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்படும்.


குறிப்பாக எல்ல, நுவரெலியா, காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட சுற்றுலாப் பிரயாணிகள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் இரவு நேரங்களில் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.


நாட்டில் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும், சில சட்டத்திட்டங்களை தளர்த்த வேண்டும் என்பதோடு, சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டில் செலவுகளை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தவறும் பட்சத்தில் நாட்டிற்கு வருமானம் கிட்டாது என்றும் வலியுறுத்தியுள்ளார். 




No comments