மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரையும் 1–0 என கைப்பற்றியது.
தம்புள்ளையில் நடைபெற்ற இந்த போட்டியின் மூன்றாவது நாளான நேற்று இலங்கை இளையோர் அணிக்கு 79 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
அணித் தலைவர் சினெத் ஜயவர்தன அதிரடியாக 14 பந்துகளில் 5 பெளண்டரிகள் 1 சிக்ஸருடன் 30 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இந்த இளையோர் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 127 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்நிலையில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 326 ஓட்டங்களை பெற்றது.
மல்ஷ தருப்பதி (70) மற்றும் ருசந்த கமகே (58) அரைச்சதம் பெற்றனர். முதல் இன்னிங்ஸில் 199 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய இளையோர் அணிக்காக ஜோர்டன் ஜோன்சன் (157) சதம் பெற்றபோதும் மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறினர். இதனால் அந்த அணி 277 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இதன்போது சுழற்பந்து வீச்சாளரான விஷ்வ தெளமிக்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு கவீஷ பியுமால் மற்றும் மல்ஷ தருப்பதி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இரு அணிகளுக்கும் இடையலான முதலாவது இளையோர் டெஸ்ட் போட்டி மழையின் இடையூறுக்கு மத்தியில் சமநிலையில் முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது. (தினகரன் )
No comments