Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பொலிஸார் ஒத்துழைப்பு: அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள நடவடிக்கை

வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கு ஒத்துழைப்புக் கொடுக்காவிட்டால் கஞ்சா வழக்குப் போடப்படும் என்று பொலிஸாரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று (27.09.2023) மாலை நடந்த விசேட கூட்டத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாகப் பிரஸ்தாபிக்கப்பட்டது.


அதையடுத்து இந்த விடயத்தை ஆராய்வதற்காக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.


வடமராட்சி கிழக்கு நாகர்கோயில், குடத்தனைப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறுகின்றது. அங்கு பொலிஸ் காவலரண்கள், இராணுவக் காவலரண்கள் இருந்தும் மணல் அகழ்வைத் தடுக்க முடியவில்லை.


மணல் அகழ்வை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.


சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு பொலிஸ் ரோந்து நடவடிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகள் பதிலளித்த நிலையில், அங்குள்ள சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர் என்ற விடயம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாகப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தால், அந்த விடயம் உடனடியாகவே மணல் கடத்தல்காரர்களுக்குத் தெரியவருகின்றது. சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கினால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.


இந்த விடயம் தொடர்பாகப் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்த போதும், தற்போது வரை சட்டவிரோத மணல் அகழ்வு இரவு, பகலாக நடந்துகொண்டிருக்கின்றது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


சட்டரீதியான அனுமதி பெற்று மணல் அகழ்வு மேற்கொள்பவர்கள் சட்டவிரோதமாக மணல் அகழ்பவர்களுடன் சேர்ந்து செயற்படுவதில்லை.


சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் என்று இனங்காணப்படுபவர்கள் அங்குள்ள பொது அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான மணல் அகழ்வு அனுமதியைக் கொண்டு மணல் அகழ அனுமதிக்கப்படுவதில்லை.


ஆனால் அவர்களையும் இணைத்து மணல் அகழ்வில் ஈடுபட வேண்டும் என்று அங்குள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேரடியாகவே மிரட்டல் விடுத்துள்ளார். அவ்வாறு செய்யாவிட்டால் கஞ்சா வழக்கில் கைது செய்வேன் என்றும் மிரட்டுகின்றார் என்று கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.


இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ் அதிகாரிகளுக்கு பணித்தார். அச்சுறுத்தல் விடுத்தார் என்று கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.


சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுகின்றது என்று இனங்காணப்பட்ட இடங்களில் பொலிஸ் காவலரண்களை அமைக்கவும், இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினரின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.



இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்படும் முன்னேற்றம் தொடர்பாக 10 நாள்களின் பின்னர் ஆராயப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


அதில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர், பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், ஜனாதிபதியின் வடமாகாண ஒருங்கிணைப்புச் செயலாளர் இளங்கோவன், பிரதேச செயலர்கள்,நீரியல்வளத்துறை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். (TW)



No comments