வியாபார நோக்கத்தில் பெரும்பாலான சிறுவர்கள் மற்றும் பெண்கள் யாசகத்துக்குப் பயன்படுத்தப்படுவது அதிகரித்திருப்பதாக அறிக்கையிடப்பட்டிருப்பதாகவும், இதனைத் தடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் கௌரவ கீதா குமாரசிங்க தெரிவித்தார். இதற்கமைய பொலிஸ், உள்ளூராட்சி மன்றங்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பூர்வாங்க கலந்துரையாடல்களை ஆரம்பித்து இந்தப் பணிகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு, இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க மற்றும் அனுப பஸ்குவல் ஆகியோரின் தலைமையில் கூடியபோதே இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
யாசகம் செய்வதற்கு சிறுவர்களை வாடகைக்குப் பெற்றுக்கொள்வது, சில சிறுவர்களுக்குப் போதை மாத்திரைகளை வழங்கி அவர்களை யாசகத்துக்கு அனுப்புதல், பெண்களைப் போலியான கர்ப்பிணிகளாகக் காண்பித்து யாசகம் கேட்க வைத்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும், இவ்வாறு யாசகம் செய்வது விபாயாரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இவற்றைத் தடுப்பதற்கு சட்ட ரீதியான ஏற்பாடுகள் காணப்படுகின்றபோதும், நடைமுறை மட்டத்தில் உரிய முறையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்நாட்டில் உள்ள யாசகர்கள் தொடர்பில் செப்டெம்பர் மாதம் சமூக சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள கணக்கெடுப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி உரிய தரவுகளைப் பெற்று நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
இதன்படி எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பான விசேட கலந்துரையாடலை நடத்தி உரிய நடவடிக்கையை மேற்கொள்வது என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பிரியங்கர ஜயரத்ன, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ முதிதா பிரசாந்தி, கௌரவ லலித் வர்ணகுமார ஆகியோர் கலந்துகொண்டனர்.
-பாராளுமன்றச் செய்தி-
No comments