சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் இராஜதந்திர உறவு வழக்கத்திற்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதல்முறை வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட விஜயம் ஒன்றாக இஸ்ரேலிய தூதுக் குழு ஒன்று ரியாதில் நடைபெறும் யுனெஸ்கோ மாநாட்டில் பங்கேற்க சவூதிக்கு பயணித்துள்ளது.
ஐந்து பேர் கொண்ட இந்த தூதுக்குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) சவூதியை சென்றடைந்ததாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
“நாம் இங்கு வந்தது பெரு மகிழ்ச்சியானது. இது சிறந்த முதல் படியாகும்” என்று அங்கு சென்ற இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் சவூதிக்கு இடையே நேரடி விமான சேவை இல்லாத நிலையில் டுபாய் வழியாக இந்த தூதுக்குழு சவூதியை அடைந்துள்ளது. யுனெஸ்கோ ஊடாகவே இவர்களுக்கு விசா கிடைத்துள்ளது.
முன்னதாக சவூதி மற்றும் இஸ்ரேல் உறவு வழக்கத்திற்கு திரும்புவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த பலஸ்தீன பிரதிநிதிகள் கடந்த வாரம் சவூதிக்கு பயணித்ததாக செய்தி வெளியாகி இருந்தது. (TKN)
No comments