உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விராட் கோலியின் மிகச்சிறந்த ஆட்டம் வெளிவரும் என்று தென்னாபிரிக்க ஜாம்பவான் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்களில் விராட் கோலியை தவிர்த்து அனைவரும் திருவனந்தபுரம் வந்து சேர்ந்துள்ளனர். சொந்த காரணங்களுக்கான விராட் கோலி மட்டும் இன்று இந்திய அணியுடன் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை 3 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள விராட் கோலி 26 போட்டிகளில் 1,030 ரன்கள் விளாசி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்திய அணிக்காக உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்களை விளாசிய வீரர் விராட் கோலி தான். அதேபோல் அவரின் பேட்டிங் ஃபார்ம் நடப்பாண்டில் அபரிதமாக உள்ளது.
16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 3 சதங்கள் உட்பட 612 ரன்களை குவித்துள்ளார். இதனால் உலகக்கோப்பையை இந்தியாவுக்காக வென்று கொடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விராட் கோலி குறித்து டி வில்லியர்ஸ் பேசுகையில், உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இந்த உலகக்கோப்பை அதிக ரன்களை விளாசிய வீரர்களில் டாப் 3 இடங்களில் நிச்சயம் விராட் கோலியும் இருப்பார்.
சொந்த மண்ணில் இந்தியா மீதான எதிர்பார்ப்பு, அழுத்தமான சூழல்களில் விராட் கோலியால் தான் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும். 2027ல் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் உலகக்கோப்பையிலும் விராட் கோலி விளையாடுவாரா என்பது கடினமான ஒன்று. அதற்கு விராட் கோலி தான் பதிலளிக்க வேண்டும்.
அதேபோல் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றுவிட்டால், நிச்சயம் அனைவருக்கும் நன்றி கூறி, டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த போகிறேன், கொஞ்சம் ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று கூற வாய்ப்புள்ளது. அதேபோல் எனது கடைசி கால கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட ஆவலாக இருக்கிறேன் என்று விராட் கோலி கூறவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
No comments