எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான ரபா கடவை மூலம் இன்று காயமடைந்த பலஸ்தீனர்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடங்கினர்.
இதையடுத்து உடனடியாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.
ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து செயல்படும் இடம் என தெரிவித்து பலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதன்போது இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் காசா நகரம் முழுவதும் சூறையாடப்பட்டது.
இந்த தாக்குதலின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலரும் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதி இல்லாமல் காசா இருந்து வருகின்றது.
ஆகவே காசாவில் இருந்து வெளியேறுவதற்கு காசா எல்லை திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான ரபா கடவை இதுவரை மனிதாபிமான பொருட்களின் விநியோகத்துக்காக பயன்படுத்தப்பட்ட நிலையில் முதல் தடவையாக இந்த பகுதி ஊடாக காயமடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டிகள் மூலம் இன்று எகிப்துக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்த பலஸ்தீனியர்கள் ஒவ்வொருவராக எகிப்துக்கு கொண்டு வரப்படுவதாக எகிப்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் காசாவை விட்டு வெளியேறும் வெளிநாட்டுப் பிரஜைகளை எகிப்திற்குள் செல்ல அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஃபா பகுதியில் தாக்குதல்களை நடத்துவதில்லையென இஸ்ரேல் முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டாலும் இஸ்ரேலிய படைத்தரப்பு இந்த விடயத்தை உறுதிப்படுத்த மறுத்துள்ளது.
ஆகவே, காயமடைந்தவர்கள் அப்புறப்படுத்தபட்ட பின்னர் முதற்கட்ட தொகுதி வெளிநாட்டு குடிமக்கள் எகிப்தை சென்றடைந்துள்ளனர்.
மேலும் வரும் நாட்களில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து முழு விவரம் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments