ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி இன்று விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் களமிறங்குவதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இரண்டு முக்கிய சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்திய அணி விளையாடிய ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இருக்கிறது. இதற்குக் காரணம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
எனினும் இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் விராட் கோலி டக் அவுட் ஆனார். இதன் மூலம் உலககோப்பை வரலாற்றில் அவர் பெற்ற முதல் டக் அவுட் இது ஆகும். இந்த நிலையில் கடந்த போட்டியில் ரன் அடிக்காமல் இருந்ததற்கு சேர்த்து இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி இரண்டு முக்கிய சாதனைகளை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்தால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை சமன் செய்து விடுவார். சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் அடித்துள்ள நிலையில் விராட் கோலி தற்போது 48 சதங்களை அடித்திருக்கிறார். இலங்கை அணி என்பது விராட் கோலிக்கு மிகவும் பிடித்த அணியாகும்.
ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட்டில் அந்த அணிக்கு எதிராக விராட் கோலி 10 சதங்களை அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 49வது சதத்தை இன்று விராட் கோலி தொட்டால் அதிவேகமாக இந்த மைல்களை தொட்ட வீரர் என்ற சாதனையும் விராட் கோலிக்கு சேரும். அதேபோன்று விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் 34 ரன்கள் அடித்தால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நடப்பாண்டில் ஆயிரம் ரன்களை தொட்டு விடுவார்.
ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை ஏழு முறை சச்சினும், விராட் கோலியும் தொட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு விராட் கோலி மேலும் 34 ரன்கள் சேர்த்தால் எட்டு முறை ஆயிரம் ரன்கள் தொட்ட வீரர் என்ற பெருமையை பெற்று சச்சின் சாதனையை முறியடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments