இந்நாட்டின் வரலாற்றோடு இரண்டறக்கலந்து, கடந்த பல நூற்றாண்டுகளாக இந்நாட்டின் முக்கிய ஒரு சமுதாயமாக வாழ்ந்து வரும் இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரியங்களையும், முதுசங்களையும் பாதுகாக்கும் நோக்குடன் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் காத்திரமான பங்களிப்புகளைச் செய்து வருகின்றது. இதற்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடம், அரும்பொருட்காட்சிசாலை மற்றும் பல்கலைக்கழக நூலகம் போன்றன முக்கிய பங்காற்றி வருகின்றன.
அறபுத் தமிழில் வெளிவந்த நூல்களும் இலக்கியங்களும் ஆவணங்களும் இலங்கை முஸ்லிம்களின் மிகப் பெறுமதி வாய்ந்த, தனித்துவமான முதுசங்களாகும். இவை இலங்கை முஸ்லிம்களுக்கே உரித்தான வரலாற்றுப் பாரம்பரியத்தையும் தொன்மையையும் பிரதிபலிக்கின்றன. எனவே, இந்நூல்களையும் ஏனைய ஆவணங்களையும் ஒன்றுதிரட்டிப் பாதுகாக்கும் முயற்சி மிக அவசரமானதும் அவசியமானதுமான ஒரு பணியாகும். இம்முயற்சியானது இக்கால கட்டத்தில் மேற்கொள்ளப்படாவிடின் இலங்கை முஸ்லிம்கள் மிக விரைவில் அவர்களது மூதாதையர்களின் மிகக் காத்திரமான கல்வி, கலாச்சார, பண்பாட்டு பங்களிப்பினை பிரதிபலிக்கும் ஒரு பெரும் முதுசத்தை இழந்துவிடுவார்கள்.
எமது பல்கலைக்கழக நூலகம் சுமார் 90 அறபுத் தமிழ் நூல்கள், ஆவணங்களைத் தற்போது திரட்டியுள்ளது. இவை எமது முஸ்லிம்களிடமிருந்து அன்பளிப்பாக கிடைக்கப் பெற்றவையாகும். இவற்றினை நாங்கள் எண்ணியமப்படுத்தி (Digitized) ஒரு மின்னியல் நூலகமாக (e-library) மாற்றியமைத்துள்ளோம். இவற்றினை http://www.ar.lib.seu.ac.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடவும் பதிவிறக்கம் (download) செய்து பயன்படுத்தவும் முடியும். மேலும் இந்நூல்களை நாங்கள் விஞ்ஞான முறைப்படி நீண்ட காலம் பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.
இம்முயற்சியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடம், பல்கலைக்கழக நூலகத்துடன் இணைந்து, நாடளாவிய ரீதியில் அறபுத் தமிழ் மொழியில் அமைந்துள்ள நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், ஆவணங்களை (கடிதங்கள், அழைப்பிதழ்கள், காணி உறுதிகள், விளம்பரங்கள், திருமணப் பதிவுகள் போன்றன) பாதுகாக்கும் ஒரு திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. ஆகையால் தங்களின் முன்னோர்களினால் பயன்படுத்தி பேணப்பட்ட அறபுத் தமிழ் மொழியினால் ஆக்கப்பட்ட நூல்கள், ஆவணங்கள் இருப்பின் அவற்றினை கையளித்து, நீங்களும் 'ஸதகத்துல் ஜாரியா"வான இக்கைங்கரியத்தில் பங்குதாரர்களாக மாறி, அல்லாஹ்விடம் நற்கூலிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். தங்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற இந்நூல்கள் அடுத்த சந்ததியினர் பாவித்துப் பயன் பெறும் வகையில் பேணிப்பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாது, எமது மின்னியல் நூலகத்திலும் அவற்றினைத் தங்களது பெயருடன் பதிவேற்றம் செய்வோம். நீங்கள் எமக்கு அன்பளிப்பாக வழங்கிய நூல்களுக்கான ஏற்புக்
கடிதமானது(Acknowledgement letter) தங்கள் விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
Prof. (Dr). SMM Mazahir,
Dept. of Islamic Studies,
South Eastern University of Sri Lanka.
Mob:0772849467
Email: mazahirsmm@seu.ac.lk
Mr. SLM.Sajeer,
Senior Assistant Librarian (Special & Archival Collection),
South Eastern University of
Sri Lanka
Mob:0772635808
Email: sajeer.slm@seu.ac.lk
No comments