இஸ்ரேல்–காசா போர் இரண்டாவது மாதத்தை எட்டியிருக்கும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் கோட்டையாக இருக்கும் காசா நகரின் மையப்பகுதியை நோக்கி முன்னேறுவதாக இஸ்ரேல் கூறியிருக்கும் அதேநேரம் ஆக்கிரமிப்பு படைகளுடன் கடுமையாக சண்டையிட்டு வருவதாகவும் இழப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தபோதும் அங்கு இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்தும் இடைவிடாது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதி எங்கும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அல் ஷிபா மற்றும் இந்தோனேசிய மருத்துவமனைகள், அதேபோன்று கான் யூனிஸ், நுசைரத் மற்றும் ஜபலியா அகதி முகாம்களுக்கு அருகிலும் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் மேலும் 241 பேர் கொல்லப்பட்டதாக அந்தப் பகுதியின் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி போர் வெடித்த கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 10,569 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4,324 சிறுவர்கள், 2,823 பெண்கள், 649 வயதானவர்கள் உள்ளடங்குகின்றனர்.
இதில் 1,350 சிறுவர்கள் உட்பட 2,550 பேர் காணாமல்போயிருப்பதோடு இதில் பெரும்பாலானவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தவிர 193 மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 45 அம்புலன்ஸ் வண்டிகள் தாக்கப்பட்டுள்ளன.
இதனால் காசாவில் கொல்லப்பட்ட, காயமடைந்த மற்றும் காணாமல்போனவர்கள் எண்ணிக்கை 40,000ஐ தாண்டி இருப்பதாக காசாவின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலிய தரைப்படைகள் நிலத்தடியில் இருக்கும் ஹமாஸ் அமைப்பின் பரந்த சுரங்கப்பாதை கட்டமைப்புகளை கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே காசா பகுதியை இரண்டாக பிரித்திருப்பதாகவும் காசா நகரை சுற்றிவளைத்திருப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேலிய தரைப்படை, சுரங்கப்பாதைகளில் மறைந்திருந்து அதிரடி தாக்குதல்களை நடத்தும் பலஸ்தீன போராளிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் வடக்கு காசாவில் இடம்பெற்ற மோதல்களில் மேலும் ஒரு இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்ததாக இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது. இதன்படி கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி இஸ்ரேல் தரைவழி நடவடிக்கையை ஆரம்பித்தது தொடக்கம் காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை குறைந்தது 31 ஆக உயர்ந்துள்ளது.
இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறுவதற்கு உதவியாகவும் காசா நகரின் கிழக்கு பக்கமாக உள்ள கட்டடங்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கி அழித்து வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அந்த டாங்கிகள் காசா நகரின் மையப் பகுதியை நோக்கி முன்னேற வழி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தெற்கிலும் அவலம்
போதிய எரிபொருள், நீர் மற்றும் மா இல்லாதது மற்றும் வான் தாக்குதல்களால் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் காரணமாக வடக்கு காசாவில் இருக்கும் அனைத்து பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளன.
ஒருவருக்கு தினசரி தேவைக்கு 50 தொடக்கம் 100 லீற்றர் நீர் தேவைப்படும் நிலையில் காசாவில் குடிப்பது மற்றும் துப்புரவு உட்பட அனைத்துத் தேவைகளுக்காகவும் ஒருவருக்கு சராசரியாக மூன்று லீற்றர்களே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவில் உணவு விநியோகம் தீர்ந்து வருவதாக குறிப்பிட்டிருக்கும் உலக உணவுத் திட்டம் அங்கு ஐந்து நாட்களுக்கு போதுமான உணவுகளே கையிருப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
காசா போர் வெடிப்பதற்கு முன் அங்கு தினசரி 500 லொறி வண்டிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி தொடக்கம் குறைந்தது 451 லொறிகளே காசாவுக்குள் நுழைந்துள்ளன. இதில் 158 வண்டிகள் மாத்திரமே உணவுப் பொருட்கள் ஏற்றிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காசா நகரை சுற்றிவளைத்திருக்கும் இஸ்ரேல் அந்த குறுகிய நிலத்தின் வடக்கில் இருந்து மக்கள் தெற்கை நோக்கி செல்ல அனுமதித்தபோதும் அங்கு எந்தப் பகுதியிலும் பாதுகாப்பு இல்லை என்பது உயிரிழப்புகள் காட்டுகின்றன. மத்திய மற்றும் தெற்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சுமார் 3,600 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காசாவில் இருக்கும் மக்கள் வடக்கில் இருந்து தெற்கை நோக்கி வெளியேறுவதனால் அவர்கள் எதிர்கொள்ளும் அவலநிலை தீர்ந்துவிடாது. அங்கு ஏற்கனவே பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தினால் நடத்தப்படும் 92 தற்காலிக முகாம்களில் 550,000க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர்.
இந்த முகாம்களில் வசதிகள் குறைவாக இருப்பதோடு நோய்களும் வேகமாக பரவி வருகின்றன.
இங்கே 600க்கும் அதிகமானவர்கள் ஒரு கழிப்பறையை பகிர்ந்து வருவதாக ஐ.நா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இங்கிருப்பவர்கள் இடையே கடுமையான சுவாச நோய், தோல் தொற்று நோய்கள், வயிற்றுப்போக்கு மற்றும் சின்னம்மை நோய்கள் பரவி இருப்பதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இங்கிருப்பவர்கள் உணவை பெறுவதும் கடினமாக உள்ளது என்று அது தெரிவித்துள்ளது.
காசாவின் எதிர்காலம்
காசாவில் மேற்கொள்ளும் தரைவழி நடவடிக்கை ஹமாஸ் அமைப்பினால் பிடித்து வைத்திருக்கும் பணயக்கைதிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது. இந்தப் பணயக்கைதிகள் சுரங்கப் பதையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை போர் நிறுத்தம் இல்லை என்று இஸ்ரேல் கூறி வருகிறது. மறுபுறம் காசா தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
“பொதுமக்களைக் கொல்வதைத் தவிர வேறு எந்த இராணுவ சாதனையையும் தரையில் நிகழ்த்த முடிந்ததா, என்ற (இஸ்ரேலுக்கு) நான் சவால் விடுகிறேன்” என்று மூத்த ஹமாஸ் அதிகாரியான காசி ஹமாத், அல் ஜசீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.
“காசா முறியடிக்க முடியாதது என்பதோடு அமெரிக்கர்கள் மற்றும் சியோனிஸ்ட்களின் தொண்டையில் முள்ளாக தொடர்ந்து இருக்கும்” என்றும் ஹமாத் தெரிவித்தார்.
காசாவில் போர் நிறுத்தம் ஒன்று ஹமாஸுக்கு உதவியாக அமையும் என்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நம்புகின்றன. எனினும் பிரதமர் நெதன்யாகு சண்டை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செவ்வாயன்று (07) வலியுறுத்தி இருந்தார்.
ஹமாஸை ஒழிப்பதாக சூளுரைத்து வரும் இஸ்ரேல் காசாவில் எதிர்காலம் பற்றியும் பேசியுள்ளது. போருக்குப் பின்னர் ஒரு காலவரையற்ற காலத்திற்கு காசாவின் பாதுகாவலராக இருக்கப்போவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
எனினும் காசாவில் ஆட்சிபுரிய இஸ்ரேல் விரும்பவில்லை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போரை முடித்த பின் இஸ்ரேலோ அல்லது ஹமாஸோ காசாவில் ஆட்சி புரியாது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கல்லன்ட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காசா ஆட்சியில் ஹமாஸ் அங்கமாக இருக்காது என்றும் போருக்குப் பின்னரான காசா தொடர்பிலும் எவ்வாறான ஆட்சி இருக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆரோக்கியமாக பேச்சுவார்த்தை தேவை என்றும் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்திருக்கும் ஹமாஸ் அமைப்பு, காசா அரசு என்பது முழுமையாக பலஸ்தீன விவகாரம் என்றும் அந்த உண்மையை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
1967 ஆறு நாள் போரின் மூலம் இஸ்ரேல் ஆக்கிரமித்த காசா பகுதியில் இருந்து அது 2005 ஆம் ஆண்டு வாபஸ் பெற்றது. தொடர்ந்து இடம்பெற்ற தேர்தலில் பலஸ்தீன அதிகாரசபையை தோற்கடித்து ஹமாஸ் அமைப்பு அங்கு ஆட்சியை கைப்பற்றியது. 2014 ஆம் ஆண்டிலும் காசாவுக்கு இஸ்ரேல் தனது தரைப்படையை அனுப்பியிருந்தது.
சவூதியில் மாநாடு
இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்வரும் நாட்களில் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மாநாட்;டை சவூதி அரேபியா கூட்டவுள்ளதாக அந்நாட்டு முதலீட்டு அமைச்சர் கலீபா அல் பாலஹ் தெரிவித்துள்ளார்.
“இந்த வாரத்தின் அடுத்த சில நாட்களில் ரியாதில் அவசர அரபு மாநாட்டை நடத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்று சிங்கப்பூரில் நடைபெறும் ப்ளும்பர்க் புதிய பொருளாதார மன்றத்தில் நேற்று (08) உரையாற்றிய பாலிஹ் தெரிவித்தார்.
“அடுத்த சில நாட்களில் இஸ்லாமிய மாநாடு ஒன்றையும் சவூதி அரேபியா கூட்டவுள்ளது. மோதலுக்கு அமைதித் தீர்வு ஒன்றை எட்டும் நோக்கிலேயே சவூதி அரேபியாவின் தலைமையின் கீழ் குறுகிய காலத்தில் இந்த மாநாடுகள் மற்றும் ஒன்றுகூடல்கள் நடத்தப்படுகின்றன” என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரானிய ஜனாதிபதி இப்ராஹி ரைசி வரும் ஞாயிற்றுக்கிழமை (12) சவூதி அரேபியா பயணிக்கவிருப்பதாக ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் சீனாவின் மத்தியஸ்தத்தில் ஈரான் மற்றும் சவூதி அரேபியா பல ஆண்டுகள் நீடித்து வந்த முறுகலை முடிவுக்குக் கொண்டுவந்த பின் ஈரானிய அரச தலைவர் ஒருவரின் முதல் விஜயமாக இது உள்ளது. (தினகரனின் கட்டுரை)
No comments