மிக்ஜாம் புயலால் கனமழை பெய்து வெள்ளபெருக்கு ஏற்பட்ட நிலையில், சென்னையில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் நிவாரண பொருள்களை கொடுத்து வருகிறார்.
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் சூழ்ந்ததால் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால், மக்களது இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்து சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது, இந்த மிக்ஜாம் புயலானது சென்னையை விட்டு விலகி தெற்கு ஆந்திரத்தின் பாபட்லா அருகே 100 கி.மீ தொலைவில் கரையை கடந்து வருகிறது.
வேளச்சேரியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் தனியார் படகுகள் மூலம் வெளியேற்றப்படுகின்றனர். குடிதண்ணீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமலும், மின்சாரம், செல்போன் சேவை ஆகியவை கிடைக்காமலும் அவதிப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுகள் ஹெலிகாப்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்து 3 நாள்களாக மழை நீரில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தரமணிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கினார்.
No comments