டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலமாக நாடு திரும்பியுள்ளனர். சொந்த மண்ணில் கால் பதித்த விராட் கோலி, அவரது சகோதரர் மற்றும் சகோதரி இருவரும் குடும்பத்தினருடன் நேரில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதன்பின் இந்திய அணி உடனடியாக நாடு திரும்பும் என்று எதிர்பார்ப்பட்ட நிலையில், பார்படாஸில் புயல் வந்தது. இதனால் கூடுதலாக 2 நாட்களில் பார்படாஸிலேயே இந்திய வீரர்கள் முகாமிட்டனர். இதன்பின் புயல் ஓய்ந்த நிலையில், பிசிசிஐ சார்பில் இந்திய வீரர்களை அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்திய அணி நேற்று மாலை விமான நிலையம் வந்து சேர்ந்தது. இவர்களை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்கள் டெல்லி விமான நிலையத்தில் குவிந்தனர். வீரர்களுக்கு கைகளை அசைத்தபடி இந்திய வீரர்கள் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். அதன்பின் விராட் கோலி அமர்ந்திருந்த ஜன்னல் பக்கம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
இந்த வரவேற்பால் விராட் கோலியே திக்குமுக்காடிப் போனார். சக வீரர்களிடம் "இங்கே பாருங்கள்" என்று அழைத்து காட்டினார். இதன்பின் இந்திய வீரர்கள் ஐடிசி ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கே விராட் கோலிக்கு மற்றொரு சர்ப்ரைஸ் காத்திருந்தது. டெல்லியில் உள்ள விராட் கோலியின் சகோதரர் விகாஸ் மற்றும் சகோதரி பாவனா இருவரும் விராட் கோலியை சந்திக்க நேரில் வந்திருந்தனர்.
இவர்களை பார்த்து விராட் கோலி உற்சாகமடைந்தார். அவர்களை தனது அறைக்கு அழைத்து சென்ற விராட் கோலி, டி20 உலகக்கோப்பை பதக்கத்தை காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதன்பின் ஹோட்டல் அறையிலேயே தயாரான இந்திய வீரர்கள், அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட கேக் வெட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே ஹோட்டலில் என்ட்ரியின் போது சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
No comments