மாணவர்கள் மத்தியில் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில், அக்குறணை பிரதேச சபை பொது நூலகத்தினால் முதல் 100 அங்கத்துவத்தை பெற்ற நபர்களுக்கு ஊக்குவிப்பு பரிசில்கள் வழங்கப்பட்டன.
இது பற்றிய தீர்மானம் கடந்த வருடம் நடைபெற்ற அக்குறணை பொது நூலகத்தை விருத்தி செய்வது தொடர்பான நூலக ஆலோசனை குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இலங்கை வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, மேற்குறிப்பிட்ட ஊக்குவிப்பு பரிசுகள் மற்றும் நூலக அபிவிருத்தி திட்டத்திற்கு அமைய மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் அக்குறணை பிரதேச சபைத் தலைவர் இஸ்திஹார் இமாதுதீன் தலைமையின் கீழ் நடைபெற்றது.
அக்குறணைd Shine Academy இல் (Wood House கட்டிடம்) நடந்த இந்த பரிசளிப்பு நிகழ்வில் அக்குறணை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், உள்ளூராட்சித் திணைக்களத்தின் மனிதவள அபிவிருத்தி அதிகாரி திரு. கித்சிரி திசாநாயக்க, யட்டிநுவர பிரதேச சபை கௌரவ உறுப்பினர் ரம்சி ரஹ்மான், வஹாப் மாஸ்டர், அஸ்ஹர் மாதிரி பாடசாலையின் அதிபர் திருமதி எப் ஜிம்னாஸ், குருகொடை ஆண்கள் பாடசாலையின் அதிபர் திரு முஹம்மத் ஹம்சி உற்பட மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் என பலரும் பங்கேற்றனர்.
கடந்த 20 வருட காலமாக மூன்றாம் நிலை நூலகமாக இருந்து வரும் அக்குறணை நூலகத்தை தரமிக்க முதன்நிலை நூலகமாக மாற்றியமைக்க எதிர்பார்க்கின்றோம். அதற்கமைய அங்கத்தவர்களை அதிகரித்தல், போட்டி நிகழ்ச்சிகள் மூலம் பாடசாலை மாணவர்களுக்கிடையில் புத்தக பாவனை விகிதத்தை அதிகரித்தல், அழகியல் மற்றும் இலக்கிய துறை சார்ந்தவர்களுக்கான பிரயோக கற்றல் வசதிகளை நூலகத்திலேயே வழங்குதல் போன்றவைகள் உட்பட பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பிரதேச சபையினால் மாத்திரம் இதனை சாத்தியப்படுத்த முடியாது.
பெற்றோர் மற்றும் ஊர் மக்களுடைய முழுமையான பங்களிப்பு அவசியமாகும். எனவே, உங்களுடைய பூரண ஒத்துழைப்பையும் இந்த முயற்சிக்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என பிரதேச சபை உறுப்பினர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: அல்தாப்