Local News

இளம் வயதில் ஊடகத்துறையில் இமயம் தொடும் பிஷ்ரின் மொஹமட்

நாம் வாழ் நாளில் பல்வேறு நபர்களைச் சந்திக்கின்றோம். அவர்களுள் சிலரை மாத்திரமே ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறோம். ஏனையோரை மறந்து விடுகிறோம். அது தவிர்க்க முடியாததாகும்.

சிலரது வாழ்க்கையைப் பார்க்கின்றபோது அவர்கள் குறித்து ஆழமாக அறிந்து கொள்ள ஆசைப்படுவதுண்டு. ஒருவேளை இது சாத்தியமாகாமலும் போய்விடுகின்றன. 

என்றோ நாம் தவறவிட்ட நபர் குறித்து நினைவூட்டப்படுகின்றபோது அவர் இறந்திருந்தால் கவலை மூண்டு கொள்கின்றது.

இன்றைய தேடலில் ஒரு வானொலிக் கலைஞராக, பத்திரிகையாளராக, எழுத்தாளராக, ஒளிபரப்பாளராக, தயாரிப்பாளராக  இளம் வயதிலேயே அதிரடியாக செயற்பட்டு வருகின்ற Bishrin Mohamed

பற்றியதாகும்.

கெகிராவை, கைலப்பத்தனவைச் சேர்ந்த முகம்மட் ஹனீபா முகம்மட் ஜிப்ரி மற்றும்  அநுராதபுரம் நேகமைவைச் சேர்ந்த ஆசிரியை அப்துல் பரீட் சித்தி நூன் பஷீரா தம்பதியினரின் மகனாக 1991.01.30 இல் பிஸ்ரின் முகம்மட் பிறந்தார்.

தரம் 01 முதல் கல்விப் பொதுத் தராதரம் வரையில் நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை பேருவளையிலும் கற்றார்.

அரசியல் விஞ்ஞானத் துறையில் வெளிவாரி பட்டப்படிப்பை நிறைவு செய்ததைத் தொடர்ந்து், 2010-2011 களில் கொழும்பு பல்கலைக் கழகத்தில் இதழியல் கற்கை நெறியை (Diploma in Journalism) பூர்த்தி செய்தார்.

தற்பொழுது கொழும்பு பல்கலைக் கழகத்தில், சிறிபாலி பிரிவில் ஊடக ஆய்வு முதுகலைமானிக் கற்கையை பயின்று வருகின்றார்.

இவர் தரம் மூன்றில் கல்வி பயிலும் காலத்தில் தனது தாயாரின் வழிகாட்டலினால் “என்னைப் பற்றி“ எனும் தலைப்பில் சிறு குறிப்பை எழுதினார். அக்குறிப்பு பிஞ்சு பத்திரிகையில் பிரசுரமானது.

தொடர்ந்து எட்டாம் தரம் படிக்கும் காலத்தில் விஜய் பத்திரிகையில் இளம் செய்தியாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரம் கற்கும் காலங்களில் நழீம் ஹாஜியார் பற்றிய நினைவு தினக் கட்டுரை, மற்றும் சமூகம் தொடர்பான கட்டுரைகள் தொடர்ச்சியாக தினகரன், விடிவெள்ளி போன்ற தேசிய பத்திரிகைகள் மற்றும் இருக்கிறம் சஞ்சிகை உள்ளிட்டவற்றில் பிரசுரமாகின.

இவ்வாறாக எழுத்துலகில் தன்னை நுழைத்துக் கொண்ட இவர் இலங்கையில் தமிழ் ஊடகத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு எனும் முதல் ஆய்வு நூலை 2012இல் வெளியிட்டார்.

2011இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முஸ்லிம் சேவையில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இச்சந்தர்ப்பம் அப்போதைய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் அஹமட் முனவ்வர் அவர்களினால் இவருக்கு கிடைத்தது.  இச்சந்தர்ப்பத்தை பிஸ்ரின் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும்.

2012களில் முஸ்லிம்கள் குறித்து தவறான கருத்தாடல்களை பெரும்பான்மை இனவாத அமைப்பினர் முன்வைத்து வந்த சந்தர்ப்பங்களில் அவ்வாறான கருத்துக்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் சிங்கள சமூகத்தில் இருந்து ஆளுமைகளையும், புத்தி ஜீவிகளையும் நேர்காணல் செய்து அதனை விடிவெள்ளி பத்திரிகையில் பிரசுரிக்கச் செய்தார்.

அதேநேரம் ரூபவாஹினியின் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் அவர்கள் வழங்கிய சந்தர்ப்பத்தின் மூலமும் மபாயிர் மௌலானாவின் வழிகாட்டலிலும் Voice of Youth எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இவ்வாறாக ஊடகத்துறையில் தன்னை வளர்த்துக் கொண்ட இவர் 2013இல் வீரகேசரி பத்திரிகையில் முழுநேர ஊடகவியலாளராக இணைந்து கடமையாற்றும் காலப்பகுதியில் பகுதி நேரங்களில் வானொலி, தொலைக்காட்சிகளில் கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டார்.

ஒருமுறை கவிஞரும் பாடலாசிரியருமான பொத்துவில் Asmin Uthumalebbe அவர்கள் நான் படத்தில் பாடல் வரிகளை எழுதிய பின்னர் மெட்றோ நியூஸ் பத்திரிகைக்காக நேர்காணல் ஒன்றிற்காக சென்ற போது வசந்தம் தொலைக்காட்சியில் இணைந்து கொள்ள சம்மதமா எனக்கேட்டு அதற்கான வழிகாட்டலையும் வழங்கினார்.

இதற்கமைவாக வசந்தம் தொலைக்காட்சியில் ஆட்சேர்ப்பு விதிமுறைகளுக்கமைவாக நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.

2013  வசந்தத்துடன் இணைந்து தினமும் காலையில் சிரேஷ்ட உடகவியலாளர் நௌசாத் முகைதீன் அவர்களுடன் எமது பார்வை செய்தித்தாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

2014 களில் வசந்தம் தொலைக்காட்சியில் முழுநேர தயாரிப்பாளராக தொடர்ந்து சென்ற இவர் தனது திறமைகளை சிறந்த முறையில் கையாண்டு மூன்று வருடங்கள் கடமையாற்றினார்.

2017இல் ஏ.எல். இர்பான் அவர்கள் UTV இன் அலைவரிசைப் பிரதானியாக கடமையாற்றிய காலப்பகுதியில் வசந்தத்திலிருந்து UTV க்கு தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் வருமாறு வேண்டிக் கொண்டதற்கு இணங்க UTV இல் இணைந்து பணியை ஆரம்பித்தார்.

UTV இவருக்கு நல்லதொரு களத்தையும் செல்வாக்கையும் பெற்றுக் கொடுத்தது. குறிப்பாக பிஸ்றினின் அடி மனதில் கிடந்த எண்ணங்களை செயலுருப்படுத்த போதிய சந்தர்பபங்களை வழங்கியிருந்தது எனலாம்.

சமூக அரசியல் மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் மக்கள் நம் பக்கம் நிகழ்ச்சி,

விளிம்பு நிலை தொழிலாளிகளையும், அவர்களது வாழ்வியலையும் மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் நானும் ஒரு தொழிலாளி நிகழ்ச்சி,

அநுர குமார திசாநாயக்க, ராஜித சேனாரத்ன, திஸ்ஸ அத்தநாக்க உள்ள பல சிங்கள அரசியல்வாதிகளைக் கொண்டு தமிழ் ஊடகத்தில் நடப்பு விவகார அரசியல் தொடர்பாக பிரளயம் அரசியல் நிகழ்ச்சி போன்றவற்றை தொகுத்து வழங்கினார்.

இவரது கடின உழைப்புக்கும் ஊடக செயற்பாடுகளுக்கும் இளம் வயதிலேயே பல விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்தப்பட்டுள்ளார்.

2017களில் A.T பௌண்டேசன் அமைப்பினரால் சிறந்த ஊடகவியலாளருக்கான விருதை முதன்முதலில் பெற்றுக் கொண்டார்.

அதே ஆண்டு இளம் ஊடகவியலாளருக்கான விருதை பூவரசி அறக்கட்டளை நிலையத்திடமிருந்து பெற்றுக் கொண்டார்.

நான் எனும் தொழிலாளி நிகழ்ச்சிக்காக 2018 இல் நடைபெற்ற அரச தொலைக்காட்சி விருது வழங்கள் நிகழ்வில், சிறந்த சஞ்சிகை ஆவண நிகழ்ச்சிக்காக ஜூரி விருது வழங்கிக் கௌரவப்படுத்தப்பட்டார்.

அதேபோல் 2019 இல் பெண்களுக்கான விருத்தோசனம் தொடர்பான ஆவண நிகழ்ச்சிக்காக ஜூரி விருதும், அதே ஆண்டு சிறந்த சிறுவர் நிகழ்ச்சிக்கான விருதும் வழங்கிக் கௌரவப்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகள் ஜூரி விருதைப்பெற்றுக்கொண்ட இளம் ஊடகவியலாளராக பிஸ்ரின் பிரபல்யம் பெற்றுத் திகழ்கிறார்.

2017இல் கொரியாவில் இடம்பெற்ற இலங்கை தொலைக்காட்சி ஔிபரப்பு வலுவூட்டல் பயிற்சிநெறியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட 14 இளம் ஊடகவியலாளர்களுள் தமிழ் பேசும் ஊடகவியலாளராக கலந்து கொண்ட ஒரேயொருவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

2019களில் இந்திய அப்துல் கலாம் தொழில்நுட்பக் கல்லூரி நடாத்திய நிகழ்வில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து தெறிவான  இருவருள் ஒருவராக இவர் தெரிவு செய்யப்பட்டு அவ்வருடத்திற்காக சிறந்த ஊடகவியலாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதேயாண்டு டிசம்பரில் டுபாய் அபுதாபியில் இளைஞர் வலுவூட்டல் நிகழ்வில் பிரதிநிதியாகவும் கலந்து கொண்டார்.

ஒலி, ஒளித்துறை மாத்திரமல்லாமல் எழுத்துத்துறையிலும் இவர் தனது திறமையை நிரூபிக்க பின்நிற்கவில்லை. 

2011இலிருந்து தமிழ் ஊடகத்துறையிலும் தேர்ச்சி பெற்றவராக செயற்பட்டு வரும் ஊடகவியலாளர் பிஸ்ரின் அவர்களின்  சகவாழ்வியம் எனும் இரண்டாவது நூலை எதிர்வரும் 2021.02.06 ஆம் திகதி கொழும்பில் வெளியீடு செய்யவுள்ளார்.

இந்நூல் ‘பன்மைத்துவ சூழலில்  சகவாழ்வியம் இலங்கையை மையப்படுத்திய உரையாடல்’ எனும் ஒற்றைத் தன்மை, பன்மைத்துவ புரிதலோடு எம் தேசம் இதுவரை காலமும் அரசியல் பன்மைத்துவத்தை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை என்ற கதையாடலை நோக்கி நகர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2016 ஆண்டு நேகமவைச் சேர்ந்த கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை உதவி விரிவுரையாளரும் தற்போதைய ஆசிரியையுமான ஜப்பார்தீன் பாத்திமா றிஸ்தியா அவர்களை மணந்து மூன்று வயது ஐய்யாஷ் எனும் அரும் பதல்வனின் பாசமிகுந்த தந்தையாக வாழ்ந்து வருகின்றார்.

ஊடகவியலாளர் பிஸ்ரின் அவர்கள் தனது இளம் வயதிலேயே பல சாதனைகளை ஊடகத்துறையில் புரிந்து வருகின்றவர். இவரது ஆர்வமும் துடிப்பும் சமூகத்திற்கும், நாட்டிற்கும் நன்மை பெற்றதாக மிளிர வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்

கல்முனை

2021.01.30

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button