Tech

வானொலித் துறையில் கைபேசி ஊடகவியல் – ஓர் அனுபவப் பகிர்வு

 

இது, வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக (கடந்த 2019 மார்ச் முதல் தற்போது வரையான) எனது கொரோனா கால அனுபவத்தை உள்ளடக்கியது.

இந்த கொரோனா கொள்ளை நோய் பரவல் நிலைமையோ அல்லது நாடடங்கு சட்டமோ எனது ‘வானொலி நிகழ்ச்சித் தயாரிப்புப் பணிக்கு’ தடையாக அமையவில்லை. கொரோனா முதல் அலையின் போது, திடீரென நாடடங்கு சட்டம் அமுலுக்கு வந்தது. நாடு வழமைக்கு திரும்பும் வரை ஏற்கனவே தயாரித்த மற்றும் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளை நிரல் படுத்திவிட்டு வீடுகளுக்கு திரும்ப வேண்டிய ஒரு கட்டாய நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டோம்.

வளவாளர்களை பெற முடியாத நிலை, ஒலிப்பதிவு கலையகத்தில் ஒலிப்பதிவு (Recording) செய்ய முடியாது நிலை, ஒருங்கிணைப்பு அறைக்குச் சென்று நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க (Editing) முடியாத நிலை, நிகழ்ச்சிகளை தயாரித்து (Produce) பிரதான கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்ப முடியாத நிலை.

என்ன செய்வது? இந்த இக்கட்டான சூழ்நிலையில் செய்ய முடியுமான ஒரே வழி, ஏற்கனவே தயாரித்த நிகழ்ச்சிகளை அல்லது ஒலிபரப்பான நிகழ்ச்சிகளை நிரல் படுத்திவிட்டு வீடுகளுக்கு வருவது மட்டுமே. நிர்ப்பந்தம் காரணமாக அதையே பலரும் முடிவாக எடுத்தார்கள்.

ஆனால், இல்லை! இது முன்னெப்போதும் வராத ஒரு நிலை. நாடே ஸ்தம்பித்துப் போயுள்ளது. அச்சம், பீதி, பதகளிப்பு, தனிமை, வறுமை, வருமான இழப்பு என நாடே பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பல்வேறு வழிகாட்டல்களையும் வேண்டி நிற்கிறார்கள். எனவே, இப்படியான ஒரு  இக்கட்டான சந்தர்ப்பத்தில், சம்பளத்துக்கு வேலை செய்வதை விட சமூகப் பொறுப்போடு வேலை செய்வதே ஒரு ஊடகவியலாளனின் பொறுப்பு. ஆகவே, இப்போது எந்த வழிகாட்டல்கள் மக்களுக்கு தேவையோ அந்த வழிகாட்டல்களையே வழங்க வேண்டும். அத்தோடு காலத்துக்குத் தேவையான நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப வேண்டும்.

எனவே, எனது நிகழ்ச்சிகளை காலத்துக்குப் பொருத்தமான வகையில் அமைத்துக் கொள்வது என்று முடிவெடுத்தேன். பிறகு, ஒவ்வொரு நாளும் ஒலிபரப்பாக வேண்டிய மொத்த நிகழ்ச்சி அட்டவணையில் ஏதும் இடைவெளிகள் வந்தால் அந்த இடைவெளிகளை நிரப்பவும் என்னிடம் நிகழ்ச்சிகள் கோரப்பட்டன. தயங்காமல் ஏற்றுக் கொண்டேன். சிரமம் தான். ஆனால், இருக்கின்ற வளத்தைப் பயன்படுத்தி ‘முடியுமான வகையில்’ புதிய நிகழ்ச்சிகளை தயாரிக்க முயற்சி எடுத்தேன். ஆனால், இந்தப் பணி எனக்கு எதிர்பார்த்த அளவிற்கு சிரமமானதாக அமையவில்லை. ஏனெனில், நான் ஏற்கனவே ஒரு கைபேசி ஊடகவியல் (Mojo Trainer) பயிற்றுவிப்பாளராக இருந்தமையே அதற்குக் காரணம்.

எனவே, வானொலிக்கு நிகழ்ச்சிகளை தயாரிப்பதில் இந்த கைபேசி ஊடகவியலை நான் பயன்படுத்துவது என்று தீர்மானித்தேன். பயன்படுத்த ஆரம்பித்தேன். அது எனக்கு இலகுவாகவும் வசதியாகவும் இருந்தது. இருக்கின்ற இடத்தில் இருந்து கொண்டே நிகழ்ச்சிக்கான பிரதியை (Script) எழுதுவது, வளவாளரை இணைத்துக் (Communicate) கொள்வது, ஒலிப்பதிவு செய்வது (Recording), ஒருங்கிணைப்பு (Editing) செய்வது, நிகழ்ச்சியைத் தயாரிப்பது (Produce), இறுதி தயாரிப்பை பிரதான கட்டுப்பாட்டு அறைக்கு (MCR) அனுப்பி (Share) வைப்பது என சகல செயல்பாடுகளையும் மேற்கொள்ள கைபேசியையே பயன்படுத்தினேன். எனவே, கைபேசி ஊடகவியல் என்பது எனது வானொலித் தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு மிகவும் இலகுவான ஒன்றாக அமைந்தது.

சில சந்தர்ப்பங்களில், அதாவது, தேவைப்படுகின்ற போது, குரலுக்கு இசை (Music) இணைப்பதாக இருக்கலாம், வளவாளர்களின் குரல்களை அவர்களிடம் இருந்து அனுப்பச் சொல்லி பெறுவதாக (Receive) இருக்கலாம், பெற்ற ஒலிப்பதிவுக் குரல்களை தேவையான முறைக்கு மாற்றுவதாக (Convert) இருக்கலாம், ஒலி இடைஞ்சல்களை குறைப்பதாக (Noise Reduce) இருக்கலாம், அவசியமான ஒலி விளைவுகளை (Effects) இணைப்பதாக இருக்கலாம், இவை அனைத்தையுமே எனக்கு கைபேசி கொண்டே மேற்கொள்ள முடியுமாக இருந்தது.

அந்த வகையில், வானொலிக்குத் தேவையான ஒரு ‘ஒலி நிகழ்ச்சியைத்’ தயாரிக்க மேற்சொன்ன பல கட்டங்களைத் தாண்ட வேண்டும், பல செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் எமது கையில் இருக்கின்ற திறன்பேசியைப் பயன்படுத்தி மேற்கொள்ள முடியும். தற்போது, அதற்கான தரத்திலேயே கைபேசிகள் சந்தைக்கு வருகின்றன. அதேபோல், இந்த மேற்சொன்ன தேவைகளை நிவர்த்தி செய்ய பல்வேறு செயலிகளும் செயலிக் களஞ்சியத்தில் (App store) காணப்படுகின்றன.

அதேபோல், மேற்சொன்ன எனது செயற்பாடுகளுக்கு மேலதிகமாக, கைபேசி மூலம், உலகில் இயங்கும் அனைத்து வானொலிகளையும் ஒரே சொடுக்கில் கேட்க (Listen) முடியும், தேவையான இசைக் கோர்வைகளை (Music) நாமே தயாரிக்க முடியும், எமக்கு பாடல் பட்டியல்களை (Playlist) தயார் செய்ய முடியும், குறும் இணைய வானொலிகளை (Podcast) நடாத்த முடியும், வானொலி தானியங்கி அறை  (Radio Automation Studio) வசதியைப் பெற முடியும், இருந்த இடத்தில் இருந்த படி நேரடி ஒலிச் சீரோடை (Live Stream) செய்ய முடியும். உடனடி ஒலிக்கலவைகளை (DJ Mix) வழங்க முடியும், இப்படி வானொலித் துறையுடன் தொடர்பான பல்வேறு விதமான செயல்பாடுகளை திறன்பேசிகளைக் கொண்டு மேற்கொள்ள முடியும்.

நீங்களும் ஒரு கைபேசி ஒலிபரப்பாளராக (Mobile Phone Broadcaster) இயங்க விரும்பினால், உங்களுக்குத் தேவையானது ஒரு தரமான திறன்பேசி (Smart Phone), காதொலிக் கருவி (Earphone) மற்றும் சில செயலிகள் (Apps) மாத்திரமே. இதற்கு மேலதிகமாக நீங்கள் ஒரு தொழில் முறை ஒலிபரப்பாளராக (Professional broadcaster) இயங்க வேண்டும் என்றால் இன்னும் சில மேலதிக உபகரணங்களை வைத்திருப்பது நல்லது. அவை உங்களுடைய தேவைக்கு ஏற்ப மாறுபடலாம். எனவே, ஒரு ‘கைபேசி ஒலிபரப்பாளராக’ என்னிடம் இருக்கின்ற எனது ‘Brocaster Mojo Kit’ இல் உள்ள கருவிகளை மாத்திரம் கீழே தருகிறேன்.

(இந்தப் பதிவு இந்தத் துறையில் கற்போருக்கு ஒரு மனக் கிளர்வை (Brainstorm) ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். அதற்காக வேண்டியே இந்தப் பதிவை ‘அடிப்படையில் இருந்து’ விளக்கமாக எழுதியிருக்கிறேன்.)

இஸ்பஹான் சாப்தீன்

ஊடக பயிற்றுவிப்பாளர்,

நிகழ்ச்சித் தயாரிப்பாளர் – வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button