Politics

கௌரவ ரவூப் ஹகீம் அவர்களே…

 கௌரவ ரவூப் ஹகீம் அவர்களே…

-சப்ராஸ் அபூபக்கர், ஊடகவியலாளன்-

இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், தேக ஆரோக்கியத்தையும் வழங்குவானாக.

இன்றுகளில் ரவூப் ஹகீமும், ரிசாத் பதியுதீனும் எமது முஸ்லிம் சமூகத்தின் இரண்டு கண்கள் போல என்பதை நீங்கள் உட்பட எல்லோரும் அறிந்திருக்கின்றோம். நாம் விரும்பியோ, விரும்பாமலோ கடந்த சில வருடங்களாக நீங்கள் இருவரும் தான் எமது முஸ்லிம் சமூகத்தின் தலைவராக பார்க்கப்படுகின்றீர்கள். அதில் நீங்கள் சாணக்கியத் தலைவராம். ரிசாத் பதியுதீன் சத்தியத் தலைவனாம். 

ஒரு துருக்கித் தொப்பிக்காக போராடி வெற்றி கண்ட இஸ்லாமிய சமூகத்துக்கு தலைவராக இருப்பது உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால் எங்களுக்கு மிகப்பெரிய வரமாக கருதுகிறோம். அதனால் தான் நீங்கள் கொடுத்த வாக்குகளை நிறைவேற்றாத பல சந்தர்ப்பங்களிலும் கூட எமது முஸ்லிம் தலைமைகளை நாம் இழந்து விடக்கூடாது என்பதற்காக உங்களுக்காகவும், உங்கள் கட்சிக்காகவும் எங்கள் முஸ்லிம் சமூகம் வாக்களித்தது. 

ரிசாத்தையும், ஹகீமையும் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒன்றாகவே பார்க்க நினைத்த எமது முஸ்லிம் சமூகம் அதிகமான சந்தர்ப்பங்களில் ஏமாற்றத்தையே பரிசாகப் பெற்றுக் கொண்டது. சாணக்கியத் தலைவன் அதிக இடங்களில் சருக்கி வீழ்வதாலே இந்த திறந்த மடலை உங்களுக்காக எழுதுகிறேன்.

கௌரவ ரவூப் ஹகீம் அவர்களே, இன்றுகளில் நீங்கள் எங்கே இருக்குறீர்கள்? நாட்டில் என்னவெல்லாம் நடக்கிறது என்று உங்களுக்குத் தெரிகிறதா?

20 வது சீர்திருத்த சட்டம் பற்றி ஒன்றும் நான் பேச மாட்டேன். கடந்த சில நாட்களாக அதைப்பற்றி பேசிப்பேசி இந்தப் பக்கமே நாரிப்போய் கிடக்கிறது. ஆனால் அந்த சம்பவத்திற்குப் பிறகு கௌரவ ஹாபிஸ் நசீர் எமது தலைமைத்துவத்திற்கமையவே நாம் ஆதரவு வழங்கினோம் என்று சொன்ன போது மனசு நொந்து, வெந்து போனது. அதையும் தாங்கிய எமக்கு நீங்கள் சொன்ன “என் கட்சிக் காரர்கள் என்னை சூழ்நிலைக் கைதியாக்கி விட்டார்கள்” எனும் வடிவேல் காமடி நீங்கள் ஒரு சினிமாப் பிரியர் என்பதை அச்சொட்டாய் சொல்லி நின்றது.

“ஒரு காகம் உங்களுக்கு வழி காட்டுமேயானால் அது செத்த நாயிடம் தான் உங்களைக் கொண்டு சேர்க்கும்” என எங்கோ ஒரு வாசகம் கேட்டிருக்கிறேன். நீங்கள் கடைசியாக சொன்ன மெடிகல் மிராகல் வார்த்தை “என் கட்சிக் காரர்கள் என்னை சூழ்நிலைக்கைதியாக்கியுள்ளனர்” என்பது நீங்கள் ஒரு உதவாக்கரையோ என கிறுக்குத் தனமாக சிந்திக்க வைக்கிறது. சரியான தலைமைத்துவமாக இருந்தால் நீங்கள் சொல்லித் தான் நிச்சயம் அவர்கள் 20 க்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள். இல்லை, அவர்கள் அவர்களுடைய இஷ்டத்துக்கு வாக்களித்திருந்தால் நீங்களும், கடைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளும் கமிஸ்ட்ரி செட்டாகும் ஒரு ப்ளே போயே….

அந்த மாட்டர் அப்படி இருக்க, 20 கெடுபிடிகளின் ஆரம்பத்திலேயே ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டார். இது ஒரு திட்டமிட்ட கைதாக இருக்கும் என அனைத்து சிறுபான்மை மக்களும் நம்பினர். அவரைக் கைது செய்து சுமார் இரண்டு வாரங்கள் நெருங்கும் நிலையில் நீங்கள் அவருடைய விடுதலைக்காக என்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள் என்பதை அறிந்து கொள்ள சாதாரண ஒரு மனிதனாக ஆசை கொள்கிறேன். 

ஒருவேளை ரிசாத் பதியுதீன் 20 மீதான வாக்கெடுப்பு காலத்தில் வெளியில் இருந்திருந்தால் அதற்கெதிராக கிளர்ந்தெழும்பி இருப்பார் போலும். முஸ்லிம் சமூகத்துக்கு 20 தொடர்பான முழுமையான தெளிவை வழங்கி அதை முழுமையாக புறக்கணித்திருக்கலாம். இப்படி எல்லாம் நடக்கக்கூடாது என்பதனால் தானோ அவருக்கு இப்படி ஒரு சிறை வாசம்…

நான் ரிசாத் கட்சியோ, ஹகீம் கட்சியோ அல்ல. ஆனால் அதிகமான பிரதேசங்களில் உங்கள் இருவரையும் அளவு கடந்து நேசிக்கின்ற அப்பாவி மக்களைக் கண்டிருக்கிறேன். பாவம் அந்த அப்பாவிகள். இன்றுகளில் குடல் நடுங்கி தன் மெளத்துக்காக ஒப்பாரி வைக்கிறார்கள்.

இலங்கையில் கொரோனாவின் முதல் அலையோடு முஸ்லிம்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியாய் ஜனாஸாக்களை எரிக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் உங்களைப்போல ஒரு சிலர் குரல் கொடுத்தாலும் காலக்கிரமத்தில் அந்தக்குரலோசை காற்றோடு கலந்து முகவரி இல்லாமலே போய்விட்டது. இப்போது அரசோடு சேர்ந்து ஆசனத்தைக் காப்பாற்றிக் கொள்வதா என எமது அரசியல்வாதிகள் சிந்தித்துக் கொண்டிருக்கும் தருவாயில் இங்கு முஸ்லிம் ஜனாஸாக்கள் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பொசுங்கிப் போகிறது. 

நாட்டினுடைய நீதியமைச்சராக ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி. இந்த ஜனாஸா விவகாரம் தொடர்பில் அவர் எங்காகவது பேசியிருக்கிறாரா என்பதை நான் அறியேன். ஆனால் உங்களோடு சேர்த்து சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நீங்கள் இது தொடர்பில் என்ன பேசியிருக்கிறீர்கள்? என்ன முடிவுகளை எட்டியிருக்கிறீர்கள்? என்பதை உங்கள் முகப்புத்தக பக்கம் எல்லாம் தேடி அலுத்துப் போனேன்.

இன்னும் கட்சி கட்சி என்று பிரிந்து தானா இருக்கின்றீர்கள்? இந்த வாரம் இரண்டு ஜனாஸாக்கள் அடு்த்தடுத்த நாள் எரிக்கப்பட்டன. எனக்கெல்லாம் என்னுடைய நெருங்கிய ஒரு உறவு பற்றி எரிவது போல் இருந்தது. நீங்கள் எல்லாம் எப்படி உணர்கிறீர்கள் என்பது தெரியாது. ஆனால் 2010 களில் நீங்களும் நீதியமைச்சராக இருந்த ஒருவர் என்பது நினைவுக்கு வருகிறது. உங்களுக்கு நீதித்துறை பற்றி இன்று உள்ளவரை விட அதிகம் தெரிந்திருக்கலாம். அது தவிர நீங்கள் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற நல்லதொரு கல்விமான். எனவே இப்பொழுது ரிசாத் பதியுதீன் உள்ளே இருப்பதால் உங்களுக்கு  மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. 

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தான் பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அங்கே இருக்கக்கூடிய எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றுகளில் “பல்டி அடித்தல்” சம்பந்தமாக ரிவிஷன் செய்து கொண்டிருக்கிறார்கள் போலும். தயவு செய்து எம் முஸ்லிம் சமூகத்தின் மீது தாட்சணை காட்டச் சொல்லுங்கள். இன்று எரிக்கப்படுவது யாரோ ஒருவராக இருந்தாலும் நாளை நமது குடும்பத்தில் ஒருவருக்கு நடந்தால் நாம் எப்படி தாங்கிக் கொள்வது. முடியாது இல்லையா? நரக வேதனையை விட கொடுமையாக உணர்கிறோம் தானே. அப்படியாயின் எம் சமூகம் எரிக்கப்படும் போது நீங்கள் மௌனம் காக்கலாமா?

முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது தொடர்பில் நீதியமைச்சர் நினைத்தால் உடனடியாக முடிவு கிடைக்கும். இருப்பினும் அவருக்கு இன்னும் மனித சமூகத்தின் வலியின் ஆழம் தெரியவில்லை போலும். அதனால் கௌரவ ரவூப் ஹகீம் அவர்களே, எல்லா இடங்களிலும் சமூகம், சமூகம் என்று சாணக்கியமாய் பேசும் உங்கள் பேச்சுக்களில் மடிந்து போனவர்கள் ஏராளம் ஏராளம். அவர்களுக்காக நீங்கள் உடன் களமிறங்குங்கள். இந்த ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் நாட்டில் நீதி கிடைக்காவிட்டால் சர்வதேசத்திடம் கையேந்துங்கள். உங்களுக்கு பக்கபலமாக இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்கள் பின்னால் இருப்பார்கள். இதுவொன்றும் எமது வீட்டுப் பிரச்சினை அல்ல. ஒரு துருக்கித் தொப்பிக்காக போராடி வெற்றி கண்ட ஒரு சமூகத்தினது உரிமை சார்ந்த போராட்டம். நீங்கள் களமிறங்குங்கள். இன்ஷாஅல்லாஹ் உங்களது எண்ணம் தூய்மையாக இருந்தால் எல்லா நலவும் நம் பக்கமே இருக்கும். 

யாரப்பனா! நம் அனைவரையும் கொடிய நோயிலிருந்து பாதுகாப்பாயாக!

சப்ராஸ் அபூபக்கர்,

ஊடகவியலாளன்,

01.11.2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button