Local News

இலங்கை அபிவிருத்திக்கான ஊடக அமைப்பு (SDJF) ஏன்? எதற்கு? எப்படி?

2013ம் ஆண்டு காலப்பகுதி அது. ஊடகத்தில் உச்சம் தொட வேண்டும் என ஆசைப்பட்ட மீசை முளைக்க ஆரம்பித்த யௌவன காலக் கனவு அது. MC ரஸ்மின், என் பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவன். பாடசாலைக் காலத்திலிருந்து எனக்கு நன்கு பரீட்சையமான ஒருவர். சிறு வயது முதலே அவரும் ஒரு கலைக்காதலன் போலும். அவருடைய பாடசாலைக் காலத்தில் ஒரு சஞ்சிகை வெளியிட்டார். பெரும்பாலும் அதன் பெயர் “முத்துக்கள்” என நினைக்கிறேன். பிறகு அதிகமான பாடசாலை மேடைகளில் அவரை கதாநாயகனாகக் கண்டேன். கடைசியாக அவருடைய உயர்தரத்தின் கடைசி நாட்களில் எமது விசிநவ பகுதியின் குரீகொடுவ பாலர்பாடசாலை கலைவிழாவை தொகுத்து வழங்கி விட்டு விசிநவக்கி விடை கொடுத்து விட்டார். சிறிது காலத்தின் பின்னர் இ.ஒ.கூ.தா. அவரது குரலை காற்றலையில் சுமந்து வந்தது. அவர் குரல் கேட்டு உள்ளம் பூரித்துப் போனது. இன்னும் அவர் குரல் கேட்பதில் ஆர்வம் அதிகரித்தது. காலம் செல்லச்செல்ல தனியார் வானொலியிலும் அவர் பிரவேசம் புகுந்து விளையாடியது. குறிப்பாக அவர் எழுதித் தயாரிக்கும் நாடகங்கள் வேற லெவல். இப்படி ஆரம்பித்த அவருடைய ஊடகப் பயணம் நல்லதொரு ஊடக சந்ததிக்கான பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து வைத்தது எம் இளைய தலைமுறைக்கு ஓர் பேரதிஷ்டமே.

மிக அன்பாக நெருங்கிப் பழகிய MC ரஸ்மின் “இலங்கை அபிவிருத்திக்கான ஊடக அமைப்பின்” பணிப்பாளர் என்ற விடயம் 2013 ம் ஆண்டு அவரோடு அவர் குழுமத்தில் இணைந்த பிறகு தான் தெரிய வந்தது. SDJF என்ற இந்த அரச சார்பற்ற தனியார் நிறுவனம் சமூகம் சார்ந்து அதிகமாய் சிந்திக்க ஆரம்பித்தது. மக்களது பிரச்சினைகளை இனங்கண்டது. முடியுமான தீர்வுகளை கண்டறியத் தயாரானது. சகோதரர் ரஸ்மின் தலைமையில் நல்லதொரு குழு கடமையில் இருந்தது. குறிப்பாக சட்டத்தரணிகள் குழு ஒன்று கூடவே இருந்தது. சமூகம் சார்ந்த செயற்பாடுகளுக்காய் முழுமையாக SDJF களமிறங்கியது. ஆனால் இந்தளவு தூரத்துக்கு இந்த நிறுவனம் வளர்ச்சியடையும் என்று நான் கனவிலும் நினைத்தது கிடையாது.

2013 ம் ஆண்டின் இறுதிக் காலப்பகுதியில் என்னுடைய சுய விருப்பத்தின் பேரில் நான் SDJF நிறுவனத்தின் “வானொலி ஒருங்கிணைப்பாளர்” பதவியிலிருந்து விலகிக் கொண்டாலும் சகோதரர் ரஸ்மின் உடனான தொடர்பு தொடர்கிறது.

இனி, SDJF நிறுவனம் என்ன நோக்கத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதோ அதை விட உயர்ந்த நிலையில் இப்போது இருக்கிறது என்பதை மார் தட்டிச் சொல்லலாம். அதிலும் கடந்த குறுகிய காலத்துக்குள் மிகப்பெரிய வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் SDJF நிறுவனம் அடைந்துள்ளது. இப்போது சட்டத்தரணி அஸாத் தலைமையில் SDJF நிறுவனம் இயங்க நல்லதொரு ஆலோசனைக் குழு அவர்களை வழி நடத்துகிறது. இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், சட்டத்தரணிகள் என்போர் உள்வாங்கப் பட்டுள்ளனர்.

சகோதரர் ரஸ்மின் இன்னுமொரு சாதனைப் பயணத்தில் களமிறங்கவே அவர் விட்ட இடத்திலிருந்து சட்டத்தரணி அஸாத் மிகச் சிறப்பாக இந்த நிறுவனத்தை வழி நடத்திச் செல்கிறார் என்பதே யதார்த்தமான உண்மை.

அப்படி SDJF என்ன தான் செய்கிறது? 

இன்றுகளில் குறிப்பாக கடந்த மூன்று வருடங்களுக்கு உட்பட்ட காலத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக SDJF நிறுவனம் மாறியுள்ளது. குறிப்பாக ஊடகத் துறையில் ஆர்வமுள்ள இளம் ஊடகவியலாளர்களை இனங்கண்டு அவர்களை முறையாக பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறது. சமாதான ஊடகம் எனும் மையக் கருவிலே சகல மதங்களையும், இனங்களையும் மதித்து சரி சம பங்கில் மாணவர்களை பயிற்சி நெறிக்காக இணைத்துக் கொள்கின்றனர்.

தொழிநுட்பம் விண்ணை முட்டி வளர்ந்துள்ள இந்தக் நவீன யுகத்தில் அதற்கேற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளவும் SDJF நிறுவனம் மறக்கவில்லை. 21ம் நூற்றாண்டில் Mobile Journalism எனப்படும் MOJO வின் தேவையை நன்றாக உணர்ந்து கொண்ட இந்த நிறுவனம் அதற்காக மாணவர்களை தயார் படுத்த தயாரானது. 

இலங்கையில் இருக்கக்கூடிய சகல மாவட்டங்களிலிருந்தும் ஊடகத்துறையில் ஆர்வமுள்ள சிலரைத் தெரிவு செய்து அவர்களுக்கான MOJO பயிற்சி நெறியை முற்றிலும் இலவசமாக நடாத்துகின்றனர். நடாத்தப்படும் பயிற்சி நெறி சொகுசான வசதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருப்பது இந்த நிறுவனத்தின் இன்னொரு வரப்பிரசாதம்.

தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நட்சத்திர ஹோட்டலில், அறுசுவை உணவுகளோடும், வித்தியாசமான உணர்வுகளோடும் இந்தக் கற்கை நெறியை இவர்கள் ஆரம்பிப்பார்கள். பயிற்சி நெறியின் ஆரம்ப நாளே “சமாதான ஊடகம்” எனும் மையக்கருவில் சகல இனத்தவர்களையும் மதித்து அவர்களது மத அனுஷ்டானங்களுக்கு பங்கம் விளைவிக்காத வகையில் அவர்களை சோடிகளாக சேர்த்து விடுவார்கள். பயிற்சி நெறி முடியும் வரை அவர்கள் சோடிகளாக இருப்பார்கள். கட்டாயம் அந்த சோடி மாற்று இனங்களைச் சேர்ந்த இருவராகவே இருப்பார்கள். இந்த செயற்பாட்டினால் பயிற்சி நெறி முடிவில் அந்த சோடிகள் தன்னுடைய சோடியின் மதத்தை பற்றிய (உணவு, உடை, மத அனுஷ்டானங்கள், கலாசார நடவடிக்கைகள், விருந்தோம்பல்) என பல விடயங்களை நன்றாக அறிந்து கொள்கிறார்கள். இது ஊடகத் துறை வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

அதன் பின்னர் முறையான செய்தித் தயாரிப்புக்கு அந்த இளம் ஊடகவியலாளர்களை பயிற்றுவிக்கின்றனர். குறிப்பாக பிரதான மைய நீரோட்ட ஊடகங்களில் வெளியாகாத, அதுவும் கிராமப் புறங்களில் இருக்கக்கூடிய மக்களின் மக்களின் செய்திகளை வெளியுலகிற்கு எடுத்து வருவதில் உள்ள தேவையை தெளிவாக சொல்லி முழுமையான பயிற்சியை வழங்குகிறார்கள். அதுபோல இறுதி இரண்டு நாட்களில் பொறுத்தமான இடங்களுக்கு குறிப்பாக அல்லலுறும் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு இந்த இளம் ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று அவர்களது கஷ்டங்களை கதையாக்க முழுமையான பயிற்சியை இந்த SDJF நிறுவனம் வழங்குகிறது.

இந்தப் பயிற்சி காலத்தில் இளம் ஊடகவியலாளருக்கான முழுமையான அங்கீகாரத்தை SDJF நிறுவனம் வழங்குகிறது. குறிப்பாக அவர்களுக்கான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி, ஏனைய தொழிநுட்ப உபகரணங்கள், அடையாள அட்டை, டீசேர்ட் வசதி என்பவற்றோடு ஒரு லக்ஸறி வாழ்க்கை உணர்வையும் பெற்றுக் கொடுக்கிறார்கள். இது அதிகமான ஏழை இளம் ஊடகவியலாளர்களுக்கு மிகப்பெரிய தன்நம்பிக்கையையும், உந்துதல் சக்தியையும் வழங்கியுள்ளது.

இதுவரையில் சுமார் 150க்கும் மேற்பட்ட இளம் ஊடகவியலாளர்களை பயிற்றுவித்து சமூகத்துக்கு வளங்கியுள்ள SDJF நிறுவனம் தொடர்ந்தும் அவர்களை வழி நடாத்திச் செல்வது இந்த நிறுவனத்தின் இன்னொரு முக்கிய அம்சமாகும். இந்த நிறுவனத்தில் பயிற்சியை நிறைவு செய்தவர்கள் தங்களுடைய சோடியின் பிரதேசத்துக்கு ஏழு நாட்கள் கொண்ட கள விஜயத்தை மேற் கொள்ள வேண்டும். அங்கே அவர்களுடைய மத கலாசாரம், சம்பிரதாயங்கள் போன்றவற்றை அறிய வேண்டும். பிறகு அந்த பிரதேசத்தில் உள்ள ஒரு நடைமுறையை செய்தியாக்க வேண்டும். இந்த செயற்பாடானது அத்தனை இளம் ஊடகவியலாளர்களுக்கும் மிகப்பெரிய அனுபவத்தை ஊடகத் துறையில் பெற்றுக் கொடுக்கிறது.

அது தவிர, தொடர்ந்து வரும் நாட்களில் பிரதான மைய நீரோட்ட ஊடகங்களில் வெளிவராத கிராம மட்டத்திலான செய்திகளை தயாரிக்க இளம் ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதோடு அந்த செய்திகளை முறையாகத் தயாரித்து ஔிபரப்பும் செய்கிறது இந்த நிறுவனம். அதேபோல் இளம் ஊடகவியலாளர்களின் செய்தியின் தரத்திற்கேற்றாற்போல் அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்த இந்த நிறுவனம் ஒருபோதும் தவறியதில்லை.

இந்நாட்களில் SDJF, IREX, I VOICE ஆகியன இணைந்து MediaCorp எனும் பெயரில் இவர்களது செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். இதுதவிர பெண்கள் தொடர்பிலும் அதிக கரிசணையை இந்த நிறுவனம் கொண்டுள்ளது என்பதையும் நினைவு படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான வழிகாட்டல், பாலினம் சம்பந்தமான தெளிவு, கையறு நிலையில் உள்ள பெண்களுக்கான சிறப்பு வழிகாட்டல், மகளிர் சங்கங்களுக்கிடையிலான பயிற்சிகள் என நிறைய செயற்பாட்டுத் திட்டங்களை இவர்கள் பெண்கள் சமூகத்துக்காகவும் செய்து கொண்டிருக்கிறரார்கள் என்பதை கடந்த காலங்களில் இவர்களது செய்தி இணையத்தளம் மூலமாகக் காணக் கிடைத்தது.

எத்தனையோ இளம் ஊடகவியலாளர்களுக்கு நல்ல களத்தை அமைத்துக் கொடுத்த இந்த SDJF நிறுவனமானது இன்றுகளில் என்னைப் பொறுத்த வரை பிரதான ஊடகங்களை விட மிகப்பெரிய பேசு பொருளாக மாறயிருப்பது இதன் வளர்ச்சியின் ஒரு அங்கமாகும். தனது பொக்கட்டில் சிகரட்டை வைத்துக் கொண்டு “புகை பிடிக்காதீர்கள்” என மற்றவர்களை ஏவும் சமூகத்துக்கு மத்தியில் சமாதான ஊடகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை இந்த நிறுவனத்தில் இருக்கக்கூடிய சகல மதத்தினரும் பரை சாற்றுகின்றனர்.

SDJF நிறுவனம் எந்த நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை நான் அறியேன். ஆனால் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்துக்கு அப்பால் ஊடகத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தையும், வளர்ச்சியையும் கண்டுள்ளது என்பதே என் நடுநிலைப் பார்வை. இன்னும் இன்னும் சாதனை படைக்க வேண்டும், சிகரம் தொட வேண்டும் என்பதே எனதும், நமதானதுமான அவா.

சப்ராஸ் அபூபக்கர்

ஊடகவியலாளன்.

(2020.09.24)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button