Local News

கடலை, சிறிய விளையாட்டு உருண்டைகள் உங்களது பிள்ளைகளின் தொண்டையில் சிக்கினால்…

அண்மையில் தன்னுடைய இரண்டாவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய ஆண் மகவு ஒன்று, வெளி நாட்டிலிருந்து திரும்பும் தன் தந்தையின்  வரவை எதிர்பார்த்து,  ஊண்உறக்கமின்றி கதவோரம் காத்திருக்க, பிள்ளையின் பசியை உணர்ந்த தாய், அதன் அருகே விரைந்து, தான் சமைத்த கடலையை ஊட்டிக் கொண்டிருந்தாள்.

தந்தை வரும் வாகனச் சத்தம் கேட்டு சந்தோசக்களிப்பின் உச்சத்தில் பாதைக்கோடிய அப்பிஞ்சு , தன் வாயிலிருந்த கடலையை மறக்க, வாயிலிருந்த கடலை தன் இருப்பிடத்தை சுவாசப்பாதைக்குள் மாற்றிக் கொண்டது.
தந்தை வந்த அதே வாகனம் பிள்ளையை சுமந்து கொண்டு கராபிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் அசுர வேகத்தில் நுழைந்தது.

திருமணம் செய்து நான்கு வருடம் கடந்தும், பிள்ளைப் பாக்கியமற்றிருந்த அத்தம்பதிகளின் ஒற்றைவாரிசு உயிருக்கு போராட, தந்தையின் கையிலிருந்த விளையாட்டுப் பொருள் தரையில் விழுந்து கிடந்தது.

இறைவனின் கருணையால் சிகிச்சை பலனளிக்க, அன்று பிறந்த பாலகன் போல, மீண்டும் தந்தையின் கையில் மீள் ஒப்படைக்கப்பட்ட மகவின் முகம், இன்னும் என் கண்ணுக்குள் பிரகாசிக்கிறது.

இவ்வாறான பல சம்பவங்கள் தினம் தினம் நடந்தேறிய வண்ணமே உள்ளன.
கடலை, சிறிய விளையாட்டுப் பந்து, விளையாட்டுப்  பொருட்களிலுள்ள சிறிய உருண்டைகள் போன்றவற்றை தயவு செய்து குழந்தைகளின் கைகளுக்கு எட்டும் வகையில் வைக்காதீர்கள்.

ஆனாலும் சில வேலைகளில் நம்மை அறியாமலும் இவ்வாறான சம்பவங்கள் நடந்து விடுகின்றன.
அவ்வாறான வேளையில் என்ன செய்ய வேண்டும் என அறிந்திருப்பது காலத்தின் தேவையாகும்.

குழந்தையானது சிறிய பந்து / கடலை போன்றவற்றை விழுங்கி அது சுவாசப்பாதையை சென்றடைந்து விட்டால்
அனேகமாக மூச்சுத்திணறல் ஏற்படும். அதைத் தொடர்ந்து முகம், கண்கள் போன்றவற்றில் நிறமாற்றம் (cyanosis) ஏற்படும். மூச்சு விடும் சத்தத்தில் சற்று வித்தியாசம் தென்படுவதுடன் (stridor) குரலில் மாற்றங்களும் ஏற்படலாம்.

முதலில்
எந்தக் காரணம் கொண்டும் பதற்றப்பட வேண்டாம். கத்திக் கூத்தாடி அடுத்தவர்களையும் பிள்ளையையும் பயமுறுத்த வேண்டாம்.
பிள்ளையை ஓய்வு நிலைக்கு கொண்டு வந்து இருக்கமான ஆடைகளை களைந்து விடுங்கள்.

பிள்ளையின் அருகே கூட்டமாக குவியாமல் பிள்ளையை சுற்றி நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்துங்கள்.

பிள்ளையை படுக்க வைக்காமல் நிமிர்ந்த நிலையில் நிட்பாட்டுங்கள்.
பிள்ளையை இயலுமானளவு இருமச் செய்யுங்கள்.
ஆழமாக (வீரியம்) இருமச் சொல்லுங்கள்.
அதற்காக இருமலை தூண்டும் எந்த வித நடவடிக்கைகளையும் நீங்கள் செய்ய வேண்டாம்.

உடனே வைத்தியசாலையை நோக்கி கொண்டு செல்லுங்கள்.
அங்கு…..

நாடிக் குருதியிலுள்ள ஒட்சிசனின் அளவு குறைந்திருந்தால் முகமூடி மூலமாக ஒட்சிசன் உடனடியாக வழங்கப்படும்.
(100% oxygen by facemask )

பிள்ளையை முன்பக்கமாக குனியவைத்து (leaning forward) பின்பக்கமாக இரண்டு தோற்பட்டை என்புக்கும் இடைப்பட்ட பகுதில் வைத்தியரினுடைய வலமான கையினால் (உள்ளங்கை ஆரம்பிக்கும் பகுதி) 5 தடவைகள் பலமாக இடிக்கப்படும்/குத்தப்படும்.
(5 back blow)
இவ்வாறு செய்தும் சிக்கிய பொருள் வெளிவரவில்லை எனில்,

பிள்ளையின் பின்பக்கமாக சென்று, பிள்ளையின் மார்பென்பு(Xiphi sternum) முடியும் பகுதிக்கும் தொப்புளுக்கும் (umbilicus) இடையில் இரண்டு கைகளையும் வைத்து இறுக்கி உள்புறமாகவும் மேற்புமாகவும் 5 முறை பலமாக அமத்தப்படும். (ஒரு வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு செய்யப்படுவதில்லை)
(Abdominal thrust) (Heimlich’s manoeuvre)
இவ்வாறு செய்தும் சிக்கிய பொருள் வெளிவரவில்லை எனில் மேற்குறிப்பிட்டது போல் மீண்டும் செய்யப்படும்.

அவ்வாறும் வரவில்லை எனின்…
மார்புப்பட்டை என்பின் கீழ் பகுதியில் 5 முறை மிகவும் பலமாக அமத்தப்படும்.
(Chest thrust)

 அவ்வாறும் வரவில்லை எனில் laryngoscope இன் உதவியுடன் நீண்ட புயங்களைக் கொண்ட
Magill forceps இனால் அந்தப்  பொருள் வெளியில் எடுக்கப்படும்.

இவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தால் இறுதியாக க்ரிகோதைரொடொமி செய்யப்படும். (Cricothyrotomy)
கழுத்தில் துளையிட்டு அதனூடாக டியுப் (Tube) ஒன்று அனுப்பப்பட்டு சுவாசம் அளிக்கப்படும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் பிள்ளை பெற்றுக் கொண்ட தாய்மார்களுக்கு இவ்வாறான நிலமைகளின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
நம் நாட்டில் ????
(தகவல் பிரதி செய்யப்பட்டது)

A.R.A. Rizan
Faculty of Medicine
University of Ruhuna

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button