இந்த அரசாங்கம் கடந்த நான்கு வருடங்களாக பல கோடி ரூபாய் பணத்தை செலவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பு வல்லுனர்களும் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கும் கற்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டும் கோடிக்கணக்கில் பணத்தை வீணடிப்புச் செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இவர்களின் இந்த முயற்சியினால் நாட்டுக்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை. இதன் மூலம் வட மாகாண மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதேவேளை, தெற்கு வாழ் மக்களும் பகைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நேற்று (30) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
19 ஆவது திருத்தச் சட்டத்தினால் அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் அதிகாரமுடைய மூன்று தலைவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் அதிகாரத்தில் ஒரு பகுதியை பெற்றுக்கொண்டு ஒரு பகுதியை மீதம் வைத்துள்ளதாகவும் பிரதமரின் அதிகாரத்தை அதிகரித்து சபாநாயகருக்கு மென்மேலும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மூன்று தலைவர்களுக்கு ஒரு நாட்டை முன்னெடுத்து செல்ல முடியாதென்றும் அதனால் நாடு சிக்கல்களுக்குள்ளாகுவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
-Copied DC –