in

முஸ்லிம் எம்பிக்கள் பதவியேற்பும் ஏற்காமையும்!…

————————————————————-
– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
————————————————————-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரிஷாத் பதியுதீன் ஆகியோர் மீண்டும் அமைச்சுக்களைப் பொறுப்பேற்றுள்ளனர். நல்ல விடயம். பாராட்டுக்குரியது. பிரதான இரு கட்சிகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் தங்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றமை  காலத்துக்கும் கட்டாயமானது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று    சில முஸ்லிம் பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட   தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் பல முஸ்லிம் அரசியல்வாதிகள் மீதும்  அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர்  இந்தக் கொடூரச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்  அல்லது ஆதவரளித்து ,ஒத்தாசைகளைப் புரிந்தார்கள் என்றெல்லாம் ஏகப்பட்ட அநியாயக் குற்றச்சாட்டுகள்  இனவாத சிந்தனை கொண்ட பேரினவாதிகளால் சுமத்தப்பட்டன.(விசேடமாக ரிஷாத் பதியுதீன் மீது)

மற்றொரு பக்கத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தின் பின்னர்  இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.  இவர்களில்  அதிக எண்ணிக்கையானோர் குறித்த சம்பவத்துடன் எவ்விதத்திலும்  தொடர்புடையவர்கள் அல்லர். ஆனால் அன்றைய வேகத்தில் அவர்களும்  சந்தேகத்தின்  பேரில் கைது செய்யப்பட்டனர். அன்றைய நிலையில் அது தவிர்க்க முடியாத ஒரு விடயமாக இருந்தது.

இன்னொரு பக்கம் இலங்கையின் சில இடங்களில் காடையர்களால் அப்பாவி முஸ்லிம்கள் தாக்கப்பட்டு அவர்கள் சொத்துக்கள்  கொள்ளையிடப்பட்டு  தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பள்ளிவாசல்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த நாட்டு முஸ்லிம்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகினர்.

இறுதியாகக் கண்டி தலதா மாளிக்கைக்கு முன்பாக தேரரின் உண்ணாவிரதம், அதன் தொடர்ச்சியாக கண்டியில் ஏற்பட்ட பதற்ற நிலைமை. உண்ணாவிரதத்தின்போது பாதகமான சம்பவம் எதுவும்   நடந்தால் இந்த நாட்டில் வாழுக் கூடிய ஒட்டுமொத்த முஸ்லிம்களும்  எதிர்கொள்ளக் கூடிய மிக மோசமான நிலைமையையும் முஸ்லிம் தலைமைகள் உணர்ந்தன.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அனைத்து முஸ்லிம் எம்பிக்களும் தங்களது அமைச்சுப் பொறுப்புகளை  இராஜினாமாச் செய்து சமூக நலனில்  அக்கறை கொண்டதுடன்  தங்களது ஒட்டுமொத்த ஒற்றுமையும் நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் வெளிக்காட்டியிருந்தனர். இந்த ஒற்றுமையின் ஓர்  அம்சமாகவே இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC)  இறுக்கமான  தீர்மானங்களும் அமைந்திருந்தன.

இனி இன்றைய நிலைமைக்கு வருவோம். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடனோ அல்லது இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடனோ முஸ்லிம் எம்பிக்கள் எவருக்கும் தொடர்பில்லை. அவர்கள் இந்த விடயத்தில் நிராபராதிகள் என அனைத்து விசாரணைகளிலும் அதிகாரபூர்வமாக  நிரூபிக்கப்பட்டன.

ஆனால்,  அதற்காக எமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஓடிச் சென்று பதவியில் ஒட்டிக் கொள்ளவில்லை. உயிர்த்த ஞாயிறு தினத்தின் பின்னர் முஸ்லிம்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்கள், பாதிக்கப்பட்ட மக்கள், தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் எந்த விதத்திலும்  தொடர்புபடாத அப்பாவிகள் விடுதலை, முஸ்லிம்களின் பாதுகாப்பு   உட்பட வேறும்  சில விடயங்களுக்கு நீதி கேட்டும் இழப்பீட்டை வலியுறுத்தியும் உறுதி வழங்குமாறும் தெரிவித்து  அவர்கள் ஒற்றைக் காலில் நின்றனர். இவற்றில் தாங்கள் திருப்தியடையும் வரை   அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை என்பதில் திடமாகக் காணப்பட்டனர்.

இவ்வாறனதொரு நிலையில், அவர்களது கோரிக்கைகள் பலவும் உடனடியாக ஏற்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவுகளும் அதிகார தரப்புகளிலிருந்து சம்பந்தப்படடவர்களுக்குச்   சென்ற பின்னரே  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரிஷாத் பதியுதீன் ஆகியோர் மீண்டும் அமைச்சுக்களைப் பொறுப்பேற்றுள்ளனர்.

நிலைமை இவ்வாறிருக்க,  இவர்கள் மீண்டும் பதவியேற்றமை தொடர்பில் ‘பேஸ்புக்’ மற்றும் சமூகவலைத்தளங்களில்  பிழையான கண்ணோட்டங்கள்,  விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை அனைத்தும் தவறானவை.

இந்த இரு தலைவர்களும் தான் சார்ந்த சமூகம் தொடர்பில் திருப்திப்படும் அளவுக்கு அனைத்தையும் செய்து விட்டே அமைச்சர்களாகினர். மேலும் இன்றைய கால கட்டத்தில் கட்டாயமாக  அவர்கள் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க வேண்டும். அமைச்சரவைக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவும் வேண்டும். பேரினவாதிகளுக்கான பேரடியும் பேரிடியும் அதுவே.

வெளியே இருந்து  நாம் எதனையும் விமர்சிக்கலாம். ஆனால்  உள்ளே உள்ள நிலைமைகளையும்  நாம் கருத்தில் கொள்வது அவசியம்.  அதனை அவர்கள் சரியான நேரத்தில் சரியாகச் செய்துள்ளனர். இதில்  எவரும் எந்தக் குற்றமும் காணக்கூடாது என விரும்புவபன் நான்.

கடந்த 29 ஆம் திகதி  இரு அமைச்சர்களும் ஓர்  இராஜாங்க அமைச்சரும்   ஒரு பிரதியமைச்சருமாக நால்வரே  பதவியேற்றனர்.

ஆனால்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஏனைய  மூன்று எம்பிக்களும் தங்களது அமைச்சுக்களைப் பொறுப்பேற்கவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் கல்முனை விவகாரத்துக்குச்  சரியான தீர்வு கிட்டும்வரை தான்  அமைச்சுப் பொறுப்பை ஏற்கப் போவதில்லை என்ற தனது இலக்கில் விடாப்பிடியாக உள்ளார்.

இந்த விடயத்தில் அவர் உள்ளார்த்தமாகச் செயற்படுகிறார் என்பதனையும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.  அவர் பதவிக்கு ஆசை பிடித்தவர் என்றால் 29 ஆம் திகதி அவரும் மீண்டும் இராஜாங்க அமைச்சராகிருப்பார். ஆனால்,  அவ்வாறு செய்யவில்லை. இந்த விடயத்தில் அவர் திரிகரண சுத்தியுள்ளவராக வெளிப்படையாகச் செயற்படுகிறார்.

இந்த நிலையில்,  அவர் பதவியேற்காமைக்காகவும்    அவரது செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சாகிர் மௌலானா, பைசல் காசிம் ஆகியோரும் தங்களது அமைச்சுப் பொறுப்புகளை  ஏற்கவில்லை. ஆனால், அவர்கள் நினைத்திருந்தால் பதவியேற்றிருக்கலாம்.

ஹரீஸ் என்ற மனிதரின் சமூக அக்கறையைக் கருத்தில் கொண்டே  அவர்கள் இவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுத்திருந்தனர்.

 நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘கல்முனை விவகாரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கிய பின்னர், சாய்ந்தமருதுக்கு தனி  ஒரு  சபையும் கல்முனை மூன்று சபைகளாகவும் பிரிக்கப்படும். அத்துடன் கல்முனையில் இரண்டு பிரதேச செயலகங்களை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கல்முனைப் பிரச்சினை தீர்ந்த பின்னர் நாங்கள் அமைச்சுகளைப் பொறுப்பேற்பதற்கு தீர்மானித்திருக்கிறோம்.’ என  அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.  இதுதான் நானறிந்த சந்தேகமற்ற  உண்மையும்.

இதேவேளை,  கல்முனை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது காரியங்கள் ஆற்றப்பட வேண்டும். அதன் மூலமே அந்தப் பிராந்தியத்தில்  இரு சமூகங்களுக்கிடையிலும்  நல்லுறவையும் இன ஐக்கியத்தையும் எம்மால் வளர்க்க முடியும்.

தவறின் கல்முனை எப்போதும் கொதிமுனையாகவே இருக்கும்.  ஆனால் அவ்வாறு நடந்து விடக் கூடாது.

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சஹ்ரானின் மகளை பொருத்தமான பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை…!!!!

சோபித தேரருக்கு தக்க பதில் கொடுத்த ரிஸ்வி முப்தி