ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் கடப்பாட்டை மொஹான் பீரிஸ் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்
முதன்முதலாக ஊழலுக்கு எதிரான ஐ.நா பொதுச்சபையின் சிறப்பு அமர்வு நியூயோர்க்கில் நடைபெற்றது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்கள், சிவில் சமூக மற்றும் தனியார் துறையினரின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டின் முக்கியத்துவத்தினை இலங்கை வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் குற்றத்தினால் பெறப்பட்ட சொத்துக்கள் வரைவுச் சட்டமானது நாட்டின் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் என உறுதியளிக்கின்றது. ஊழலினூடாக திருடப்பட்ட சொத்துக்களின் பாதுகாப்பான புகலிடங்களை அகற்றுவதற்கும் அவற்றை திருப்பி அனுப்புவதற்கும் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். குற்றச் செயல்களினால் பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தினை துரிதப்படுத்தி அதனூடாக பொது கொள்முதல் மற்றும் இறுதிப் பயனடையும் உரிமம் கொண்ட கம்பனிகளின் வெளிப்படைத் தன்மையினை வலுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என TISL மீளவும் வலியுறுத்துகின்றது. ஊழலுக்கு எதிரான முதலாவது ஐ.நா பொதுச்சபையின் சிறப்பு அமர்வு (UNGASS) நியூயோர்க் நகரில் ஜூன் 2 தொடக்கம் ஜூன் 4 வரை நடைபெற்றது. குறித்த நிகழ்வின் போது, உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தல், ஊழலைத் தடுத்தல் மற்றும் அதற்கு எதிராக செயற்படல் தொடர்பில் காணப்படும் சவால்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியது. ஐ.நா அங்கத்துவ நாடுகளுக்கிடையே நடந்த பல மாத பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் ஏற்றுக்கொண்ட அரசியல் பிரகடனமே இந்த சிறப்பு அமர்வின் ஓர் முக்கிய விளைவாகும். இறுதிப் பயனடையும் உரிமம் கொண்ட கம்பனிகளின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல் மற்றும் பண தூய்தாக்கல் நடவடிக்கையினை தடுத்தல் போன்றவற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகள், கொள்கைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தினை இப்பிரகடனம் அங்கீகரிக்கின்றது. ஏற்றுக்கொள்ளப்பட்ட இவ் அரசியல் பிரகடனத்தின் மூலம், ஊழல் செயல்களுக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்துவோரின் பாதுகாப்பினை உறுதி செய்தல் என்பவை குறித்த அங்கத்துவ நாடுகள் உறுதி பூண்டதை மீண்டும் உறுதிப்படுத்தின. மேலும் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டில் சர்வதேச ஒத்துழைப்பு, தொழிநுட்ப உதவி மற்றும் தகவல் பரிமாற்றம் போன்றவற்றிற்கு ஆதரவளித்து மேம்படுத்தவும் மற்றும் பயனுள்ள சொத்து மீட்புச் செயல் முறையினை இலகு படுத்தவும் குறித்த நாடுகள் உறுதி பூண்டுள்ளன. குறித்த சிறப்பு அமர்வில், இலங்கை சார்பில் நிரந்தர பிரதிநிதியாக மொஹான் பீரிஸ் பிரதிநிதித்துவப்படுத்தினார். UNGASS இன் இறுதி நாளில் அவர் உரையாற்றுகையில், ஊழலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையினரின் ஈடுபாடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் தற்போதைய ஆட்சியில் ஊழலுக்கு எதிரான முயற்சிகளுக்கு குற்றத்தினால் பெறப்பட்ட சொத்துக்கள் உள்ளடக்கிய வரைவுச் சட்டமானது மேலும் வலு சேர்க்கும் என அவர் தெரிவித்தார். குற்றச் செயல்களினால் பெறப்பட்ட சொத்துக்களின் வலுவான சட்டம் தொடர்பாகவும், சட்டம் உரிய செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட வகையில் அமைய வேண்டும் என TISL பல ஆண்டுகளாக குரல்கொடுத்து வருகின்றது. இக்கொள்கைச் சட்ட கட்டமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் TISL அமைப்பும் ஆரம்பத்திலிருந்து பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு மற்றும் சட்ட அமுலாக்க அதிகார சபைகள் உட்பட பல பிரிவினரின் கருத்துக்களுடன் இறுதி வரைவு உருவாக்கப்பட்டிருப்பதாக பீரிஸ் தெரிவித்தார். ஊழல் நடவடிக்கைகள் மூலம் இலங்கை மக்களிடமிருந்து திருடப்படும் பணம் பெரும்பாலும் வெளிநாட்டு அதிகார எல்லைக்குள் மறைக்கப்படுகின்றன. இலங்கை நாட்டு குடிமக்களின் சொந்த பணமானது அவர்களினாலே அணுக முடியாத நிலைமைக்கு மாற்றமடைந்துள்ளது. இல்லையெனில் குறித்த பணத்தினை நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதற்கும் அத்தியாவசியமானவற்றின் மீது முதலீடுகளை மேற்கொள்வற்கும் பயன்படுத்தியிருக்கலாம். பொறுப்புக்கூறல் மற்றும் மக்கள் நலனுக்காக பொறுப்பான சொத்துக்களின் மீள்வருகை போன்றவற்றை உறுதி செய்யும் குற்றத்தினால் பெறப்பட்ட சொத்துக்கள் வரைவுச் சட்டத்தின் தேவையினை TISL மீண்டும் வலியுறுத்துகின்றது. மொஹான் பீரிஸ் மேலும் குறிப்பிடுகையில், ஊழலை கோவிட் 19 உடன் ஒப்பிட்டு, இது எல்லா இடங்களிலும் உள்ளது மற்றும் அதற்கு எல்லைகள் ஏதும் கிடையாது என குறிப்பிட்டார். வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தி திருடப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீட்கக் கூடிய அடிப்படையிலான முறையான கல்வியறிவும் வலுப்படுத்தலும் எமது நாட்டு மக்களுக்கு அவசியம் என அவர் குறிப்பிட்டார். 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் வெற்றிக்கு ஊழலுக்கு எதிரான செயற்பாடு மிக முக்கியமானதாகும் என பீரிஸ் மேலும் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ஒரு நாட்டின் பொதுச் சொத்துக்களை திருப்பி அனுப்புவது ஓர் சர்வதேச கடமையாகும் எனவும் குறிப்பிட்டார். திருடப்பட்ட சொத்துக்களின் பாதுகாப்பான புகலிடங்களை அகற்றுதல், அதிகார நடைமுறைகளை தடுத்தல் மற்றும் சட்ட ரீதியான தடைகள் என்பன திருடப்பட்ட சொத்துக்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதனை தடுக்கக்கூடியது எனவும் இது ஊழலுக்கு எதிரான செயற்பாட்டி முதன்மையானது என அவர் தெரிவித்தார். இலங்கை பிரதிநிதியின் அறிக்கையின் ஒருசில முக்கிய கருத்துக்களை TISL இங்கு குறிப்பிட விரும்புகின்றது. அவரின் அறிக்கையானது பொது மக்களும் சிவில் சமூகங்களுமே ஊழலுக்கு காரணம் என குறிப்பிடுகின்றது. “சட்டவிரோத அன்பளிப்புக்களையும் சலுகைகளையும் வழங்குவதன் மூலம் சட்டவிரோத நன்மைகளைப் பெறுவதற்காக ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஊழல் குறித்து முறைப்பாடு அளிப்பவர்களே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” கொடுக்கக்கூடியவர்கள் இருக்கும் வரை வாங்கக்கூடியவர்கள் இருப்பார்கள் என்ற யதார்த்தத்தை மறந்து விடாதீர்கள். இதுதான் உண்மையானது. நான் முன்னர் குறிப்பிட்டது போல் கொடுக்கக்கூடியவர்கள் அல்லது வழங்குநர்கள் அனைவரும், எல்லா பொருட்களும் மற்றும் எல்லா நபர்களும் விலைபோகக்கூடிய பொருட்களாகவே பார்க்கும் நிலைமை தனியார் துறை மற்றும் சிவில் சமூக பின்னணியில் இருந்தே உருவாகின்றது. அதி உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு பணம் கொடுக்க நபர்கள் காணப்படுவதனால் பாரியளவிலான ஊழல்கள் நடைபெறுகின்றன என பீரிஸின் அறிக்கை குறிப்பிடுகிறது. தனியார் துறை மற்றும் குடிமக்கள் தொடர்பாக இது ஓரளவு உண்மை என்றாலும், சட்டவிரோத வருவாயினை பெறுவதற்கு தமது பதவிகளை பயன்படுத்தி அதிகாரத்தினை தவறாக கையாளும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் குறித்து இவ் அறிக்கை முறையாக அடையாளப்படுத்தவில்லை. நாடுகளில் நிலவும் ஒளிபுகா அல்லது முழுமையாக மறைக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்பினால் அவர்கள் செயற்படுத்தப்படுகின்றனர். விசேடமாக அரசாங்க கொள்முதல் மற்றும் இறுதிப் பயனடையும் உரிமம் கொண்ட கம்பனிகள் சார்ந்தது (இறுதியில் தனிநபர் உரிமையாளர்கள்). மக்களினால் அல்லது மக்களின் நம்பிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிகளில் நியமிக்கப்பட்டவர்களின் உயர்ந்த கடமை சம்பந்தமான பகுதியும் இவ் அறிக்கை குறித்துக்காட்ட தவறியுள்ளது. மேலும் முறையான கட்டமைப்பு, பரவலான ஊழல்கள், தனிப்பட்ட குடிமக்களின் அல்லது நிறுவனங்களின் ஊழலை தாமே மாற்றிக்கொள்ள முடியாத நிலைமை போன்றவற்றை வெளிப்படுத்த இவ்வறிக்கை தவறியுள்ளது. மேலும் கட்டமைப்பிலான மாற்றங்கள் மற்றும் அரசினால் அமுலாக்கப்படும் சுயாதீன சட்ட அமுலாக்கம் பற்றியும் இவ் அறிக்கை குறிப்பிட்டிருக்க வேண்டும். ஓர் சட்டத்தரணியாகவும் நீதிபதியாகவும் நீதித்துறையில் பல ஆண்டுகள் அனுபவமுள்ள பீரிஸ் மேலும் குறிப்பிடுகையில், இந்த குற்றவாளிகள் ஒரு படி அல்ல மூன்று படிகள் முன்னால் உள்ளனர் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கின்றேன். அவர்களது வலையமைப்பானது சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு அவர்களின் விழுதுகள் எமது சமூகத்தையும் உள்ளடக்கும் வகையில் பரவியுள்ளது. எனவே வெறும் சொற்களினால் அன்றி முறையாக செயற்படுத்தி முறையாக அணுகுவதனூடாக குறித்த பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வினை அடைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். ஊழலுக்கு எதிரான போராட்டம் வெறும் வார்த்தைகளுக்கு அப்பால் செயற்பட வேண்டும் என்பதில் TISL முழுமையாக உடன்படுகின்றது. இருப்பினும் ஊழல் பரிவர்த்தனைகள் அல்லது செயற்பாடுகள் இரகசியமாக செயற்பட அல்லது வளர அனுமதிப்பதானது குறித்த இலக்கை அடைவதற்கான பாரிய சவாலாக அமையும்.