
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேற்படி விசாரணை தொடர்பில் பொலிஸாரின் சகல கடமைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
‘பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் பொலிஸார் முடித்துள்ளதோடு, சட்டமா அதிபரிடம் அது ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி தாக்குதல்கள் தொடர்பாக ஐந்து உயர் நீதிமன்றங்களில் ஒன்பது வழக்குகள் தற்போது விசாரிக்கப்படுகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
சுமார் இரண்டரை வருடங்களில் மிகக் குறுகிய காலப்பகுதியில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் எனவே ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கமோ அல்லது பொலிஸாரோ உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என எவராலும் குற்றம் சுமத்த முடியாது எனவும் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
‘மிகக் குறுகிய காலத்தில் சுமார் 110,000 தொலைபேசி அழைப்புக்களை நாங்கள் பகுப்பாய்வு செய்ய வேண்டியிருந்தது. மேலும், இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டதாக 24 தரப்பினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் சுமார் 23,700 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். – DC-