
-ஊடகவியலாளர் சப்ராஸ் அபூபக்கர்-
அநுராதபுரம் மாவட்டம், நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு நீண்ட நாள் தேவையாக இருந்த மாணவர் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று 02.02.2022 அன்று இடம் பெற்றது.

பாடசாலையின் அதிபர் மொஹமட் ரசூல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக அல் ஹித்மதுல் உம்மா அமைப்பின் பணிப்பாளர் தேசமான்ய, தேசபந்து அல்ஹாஜ் முஹமட் பாதிஹ் கஸ்ஸாலி, IHH நெதர்லாந்து அமைப்பின் நிர்வாகக் குழுத் தலைவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஹுஸைன் குந்தூஸ், நாச்சியாதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் அன்வர் சதாத் பஸ்மி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகிந்தளை கிளை பிரதான அமைப்பாளர் ஜனாப் ரஸ்கான், Aidha Car Sale (PVT) Ltd. நிறுவனத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் ஹனீப், A. R. M. Travels நிறுவனத்தின் உரிமையாளர் ஜனாப் தாரிக் உட்பட பெருந்திரளான மக்கள் பங்கு கொண்டிருந்தனர்.

நூற்றாண்டைக் கடந்துள்ள நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் பல்வேறு கல்விச் சாதனைகளை படைத்து வருகின்ற நிலையில் அயலூருகளிலிலுந்து அதிகமான மாணவர்கள் கல்வி கற்பதற்காக வேண்டி இந்த பாடசாலைக்கு விஜயம் செய்கின்றனர். அந்த மாணவர்கள் தங்கியிருந்து படிப்பதற்கு விடுதி வசதியொன்று அவசியம் தேவைப்பட்ட நிலையிலேயே இதற்கான நடவடிக்கைகள் நேற்று ஆரம்பம் செய்யப்பட்டது.
அல் ஹித்மதுல் உம்மா அமைப்பானது சுமார் 5.5 கோடி ரூபா செலவு செய்து இந்த மாணவர் விடுதியை அமைத்து பாடசாலைக்கு வழங்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

