
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகேவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணை வழங்கப்பட்ட நிலையில் கமகே விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை தொடர்பான சட்டமா அதிபரின் (ஏஜி) உத்தரவின் பேரில் நேற்று அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அப்போது, இது ஒரு அரசியல் சதி என்று கூறிய கமகே, இது குறித்து விசாரணை நடத்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த ஆண்டு இலங்கை கத்தோலிக்க திருச்சபையால் முன்மொழியப்பட்ட கறுப்புக் கொடி பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வதிலும் கமகே முக்கிய பங்காற்றியிருந்தார்.
இதேவேளை, சிவில் செயற்பாட்டாளரான ஷெஹான் மாலக கமகே கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், பொலிஸாரையும் சட்டமா அதிபரையும் கடுமையாக சாடியுள்ளார்.
தற்போதைய அட்டர்னி ஜெனரலையும் கடுமையாக சாடிய கொழும்பு பேராயர், அவர் ஒரு பொது ஊழியர் என்றும், அரசியல் கைக்கூலி அல்ல என்றும் கூறினார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சட்டமா அதிபர் அமுல்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டிய பேராயர், அதற்கு பதிலாக பயங்கரவாத தாக்குதல்களுக்கு நீதி கோரி குரல் கொடுப்பவர்களை கைது செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறிய கொழும்பு பேராயர், அச்சுறுத்தல் மூலம் உண்மையை நசுக்கும் முயற்சிகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிக்குமாறு பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டார். (NW)