in ,

LoveLove

உணரப்படும் ஊடகத்தின் தேவையும், பிறைநிலா ஊடகத்தின் பங்கும்.

கட்டுரையாளர்:
வெள்ளைத்தம்பி மொஹமட் ரிழ்வான்
அரசியல் விஞ்ஞானத்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்.

மனித சிந்தனையை செம்மைப்படுத்துவதிலும், நாகரீகத்தைக்கட்டி எழுப்புவதிலும் ஊடகங்கள் இன்று சிறப்பான இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுள்ளன. அந்த வகையில் சமுதாயத்தோடும், மனித வாழ்க்கையோடும் பிண்ணிப் பிணைந்து சமதாயத்தின் தலை விதியையே நிர்ணயிக்கும் சக்தியாக ஊடகம் இன்று திகழ்கின்றது. அந்த வகையில் இன்று சமுதாயத்தை சீரான வழியில் இட்டுச் செல்வதிலும், சில தவறான வழிகளில் இட்டுச் செல்வதிலும் ஊடகங்கள் மகத்தான பணிகளைப் புரிகின்றன. அந்த வகையில் நோக்கும் இடத்து இன்றைய மக்களின் வாழ்வில் இணை பிரியாத உற்ற நண்பனாக, உதிரத்தோடு உதிரமாக, கலந்து விட்ட ஓர் உன்னத சக்தியே இந்த ஊடகங்களாகும். ஓர் ஆட்சியையே தலைகீழாக மாற்றும் சக்தி ஊடகங்களுக்கு உண்டு எனலாம்.

ஊடகங்கள் என்ற வட்டத்திற்குள் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, மின்னஞ்சல் முதலானவை உள்ளடங்குகின்றன. இத்தகைய ஊடகங்களின் முக்கிய இலக்கு ஒருவரை உந்து சக்திக்கு உட்படுத்தச் செய்வதாகும். திட்டமிட்ட படி நோக்கங்களுக்கமைவாக விரும்பிய முடிவுகளை செயல்படச் செய்தல், மனதை மாற்றுதல், பராமரித்தல், ஒன்றை அடைய ஊக்குவிக்கும் தொழிற்பாடு போன்றவற்றையே இன்றைய ஊடகங்கள் தனது தலையாய கடமையாகக் கொண்டு தொழிற்படுகின்றன என்பது நித்தமே. இன்றைக்கு ஊடகங்களின் சுதந்திரம் என்பது பொறுப்பற்ற தன்மையாக இருக்கின்றது. பணத்தின் அடிப்படையிலேயே ஊடகங்கள் இன்றைக்கு மதிப்பீடு செய்யப்படுகின்றன. விளம்பரங்களுக்கு இடையிடையே உள்ள காலியிடத்தை நிரப்ப ஏதாவது செய்தி இருந்தால் போதும் என்ற அளவில்தான் ஊடகங்கள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. ஊடகவியலாளர்களிடம் ஒரு பயிற்சியோ, முன் தயாரிப்பு என்பதோ சிறுதளவும் இல்லை என்ற நிலைதான் இருக்கிறது. இதன் உச்சமாக தொலைக்காட்சி ஊடகங்கள், ஊடகப் புரிதல் என்பதையே சீரழித்து வருகின்றன.
மிக மோசமான, பொறுப்பற்ற தன்மைக்கு ஊடகங்கள் இன்று சென்று கொண்டிருக்கின்றன. எனவே, ஊடகங்களின் சமூக பொறுப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், மக்களின் நம்பிக்கையை ஊடகங்கள் இழந்து விடும். அதன்பிறகு, ஒரு போதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாது. இதனாலேயே இன்று ஊடகங்களின் தேவையானது சரியான முறையில் பக்கச்சார்பற்ற வகையில் ஊடக ஒழுக்கத்தினை கொண்ட ஊடகங்களின் தேவை உணரப்படுகின்றது. இதில் பிறைநிலா ஊடகமானது ஆறு வருடமாக இயங்கி வரும் நிலையில் ஓர் சரியான ஊடக ஒழுக்கவியலை கொண்ட ஓர் ஊடகமாக இன்று வரை இயங்கி வருவது பெருமைக்குரியதும் பாராட்டத்தக்கதுமான ஓர் விடயமாகும்.


மனிதர்களின் மனதை இலகுவில் கவர்ந்து விடும் ஓர் காந்த சக்தி ஊடகங்களுக்கு காணப்படுகின்றது. இதே போல், புரட்சியாளர்களை, தேசத்திற்கு எதிரானவர்களை எளிதில் கவரும் சக்தி ஊடகங்களுக்கு உள்ளது. இதனால் நாட்டின் அமைதி சீர் குலைந்து விடும். எனவேதான் ஊடகங்களின் சமூக பொறுப்பு என்பது முக்கியத்துவம் பெறுகிறது. தொடர்பாடலின் மிகப் பெரும் பரப்பை பிரதான வெகுஜன ஊடகங்கள் ஆக்கிரமிக்கின்ற இன்றைய காலகட்டத்தில் பிரதான வெகுஜன ஊடகத்தின் வணிக ரீதியான போக்குகள் மற்றும் இழிநிலை ஊடகவியல் செயற்பாடுகள் என்பன மாற்று ஊடகத்தின் தேவையை எமக்கு உணர்த்தி வருகின்றது. அதாவது பிறைநிலா ஊடகத்தினை நாம் ஓர் மாற்று ஊடகம் என்றும் அழைக்கலாம். காரணம் என்னவெனில், மாற்று ஊடகம் என நாம் கூறும் போது பிரதான நிரோட்டத்திற்கு வெளியே செயற்படும்.

ஒரு வெகுஜன ஊடகப்பாணியாக மக்களின் நலனுக்காக மக்களால் முன்வைக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை ஓங்கி ஒழிக்கச்செய்யக்கூடிய ஜனநாயகத் தன்மை வாய்ந்த வியாபரர நோக்கமற்ற ஊடகங்களாக மாற்று ஊடகங்கள் இருக்கின்றன.


நிறுவனமயப்பட்ட பாரம்பரிய ஊடகப்போக்கில் இருந்து விலகி கொள்கைகளுக்காகச் செயற்படுவனவாகவும் சமூக சிந்தனையில் தாக்கம் செலுத்தி, சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தக் கூடியனவாகவும் மாற்று ஊடகங்கள் திகழ்கின்றன. ஆதிக்கத்தன்மை வாய்ந்த அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுடன் போட்டியிடக் கூடிய சக்தி வாய்ந்த இவ் ஊடகங்கள் மூலமாக பிரதான வெகுஜன ஊடகங்களில் பேசப்படாத அல்லது பேச முடியாத ஏராளமான அரசியல், சமூக, பொருளாதாரம் சார்ந்த பல்வேறுபட்ட விடயங்கள், விடுதலை நோக்கிய சிந்தனைகள் அதிகம் மாற்று ஊடகங்களில் பேசப்பட்டன, பேசப்பட்டும் வருகின்றன. இவ்வாறான மாற்று ஊடகத்திற்கு சிறந்த உதாரணமாக பிறைநிலா ஊடகத்தினை எம்மால் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. மக்கள் விரும்புவதை மட்டுமல்ல, மக்களுக்குத் தேவையான விடயங்களையும் உண்மைத் தன்மையுடன் வழங்குவதுதான் ஊடகத்தின் பணி, அதனை அதிகார நிலையிலுள்ள பணம் படைத்த வெகுஜன ஊடகங்களை விட மாற்று ஊடகங்கள் அதிகம் மேற்கொள்கின்றன. இதன் மூலம் சாதாரண மக்களை அவை வலுப்படுத்துகின்றன.

பிரதான வெகுஜன ஊடகங்களுடைய பரந்த வலையமைப்பு மூலம் இலகுவில் செய்திகளை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் மாற்று ஊடகங்களில் தனிநபர் பங்களிப்பை அதிகம் பயன்படுத்த வேண்டிய தேவை அதிகம் இருக்கிறது. பெரும்பாலான சந்தர்ப்பத்தில் அது தனியாள் முயற்சியாகவே இருக்கிறது. அதாவது எடுத்துக்காட்டாக பிறைநிலா ஊடகத்தின் ஸ்தாபகரான ‘சப்றாஸ் அபூபக்கரின் ஓயாத உழைப்பும், முயற்சியும், சமூக நோக்கம் கொண்ட பார்வையும்தான் பிறைநிலா என்ற ஊடகத்தினை எமக்கான ஓர் சிறந்த ஊடகமாக பெற்றெடுத்துத் தந்துள்ளார்.


ஆர்வமும், பொதுநல நாட்டமும் மிக்கவர்களால் தான் மாற்று ஊடகங்களை தோற்றுவிக்க முடியும். மாற்று ஊடகத்தினுடைய ஒரு ஊடகவியலாளனின் அல்லது செயற்பாட்டாளனின் பணி, தான் சார்ந்த ஊடகத்தின் இலட்சியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதாகும். இதன் மூலமான சமூக மாற்றம் ஒன்றே அவர்களது எதிர்பார்ப்பாக இருக்க முடியும். இதனை பிறைநிலா ஊடகத்தின் மூலமாக அடையாளம் காண முடியும். சமூக மாற்றத்தைக் கொண்டு வர ஓயாத பல சேவைகளை ஆறு வருடங்களாக பிறைநிலா ஊடகமானது மேற்கொண்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடியும்.


ஒவ்வொரு நாளையும் பத்திரிகையுடன் தொடங்கும் எமது மக்களின் சிந்தனை வியாபார நோக்குடைய ஊடகவியலினால் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது. மக்களின் சிந்தனையைத் தூண்டாத ஊடகவியல் சமூக மாற்றத்தையோ மறுமலர்ச்சியையோ உருவாக்கப் போவதில்லை. களச் செய்தி சேகரிப்புக்கு ஊடகவியலாளர்கள் சென்று மக்களுடைய நிலைமைகளையும் கள நிலவரங்களையும் மாற்று ஊடகங்களின் மூலமாக சரியாக அறிக்கையிட முடியும். இதனை பிறைநிலா ஊடகத்தின் செயற்பாடுகளின் ஊடாக அதன் மகத்தான பணியை அடையாளம் காணலாம். அடித்தட்டு மக்களின் சவால்களை, துயரங்களை நுகர் பொருளாக்காத ஊடகத்தின் தேவை இன்று உணரப்படுகின்றது. மக்களின் உண்மையான வாழ்வியலை சித்தரிக்கக் கூடிய ஊடகமொன்றின் அவசியம் உணரப்படுகின்றது. இவ்வாறு உணரப்படும் ஊடகத்திற்கான சிறந்த உதாரணமாக பிறைநிலா ஊடகம் காணப்படுகின்றது.


தேசிய ஊடகங்களாகக் கருதப்படுகின்ற ஒரிரு ஊடகங்கள் இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் குரலாகச் செயற்படவில்லை. ஊடக தர்மத்தையும், ஊடக ஜனநாயகத்தையும் மதித்து நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக தமது நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவில்லை. அதனால்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற நிலையை ஓரிரு ஊடகங்கள் நிலைநிறுத்தாது செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. அவை தங்களது நலன்களை அடைந்து கொள்வதோடு, தாம் விரும்பும் நபர்களை ஆட்சி அதிகார பீடத்தில் அமர்த்தி அழகு பார்ப்பதற்கும், அவர்களினூடாக நலன்களை வெற்றி கொள்வதற்கும் முன்னுரிமை வழங்குவதோடு, தங்களால் வழங்கப்படும் தகவல்களை உண்மைப்படுத்தி மக்களை நம்ப வைக்கும் அளவிற்கு செயற்படுவதாகக் கூறப்படுவதை மறுதலிக்க முடியாதுள்ளது.


நோம்சாமஸ்கியின் எனும் அறிஞர் குறிப்பிடும் போது, “வார்த்தைகளின் படி சொல்வதென்றால், தான் சொல்வதையெல்லாம் மக்கள் அங்கீகரிக்க வைக்கும் வேலையைச் செய்கிற கருவிகள்தான் இன்றைய ஊடகங்கள் என குறிப்பிடுகிறார்”. ஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவுக்கு சங்கமித்திருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு அவசியமாகின்றது என்பதை சமகாலத்தில் எவரும் அறியாமலில்லை. அந்தளவுக்கு ஊடகங்கள் மனித வாழ்வில் இரண்டரக் கலந்ததாகக் காணப்படுகின்றது. வாழ்வின் ஒவ்வொரு விடயத்திலும் ஊடகங்களின் செல்வாக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுவதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதேபோல் ஒருசில ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் செயற்பாடுகள் ஊடக தர்மத்தையும் ஒழுக்கக் கோவையும், ஊடக ஜனநாயகத்தையும் மாசுபடுத்துவதையும், அவற்றிற்கு கலங்கம் ஏற்படுத்துவதையம் அறியாமலிருக்க முடியாது.


பிறைநிலா ஊடகத்தினை உதாரணமாக எடுத்து நோக்குவோமானால், கடந்த ஆறு வருடகால ஊடகத்துறையில் ஓர் இரத்தினக்கல்லாக பிறைநிலா காணப்படுவதை அவதானிக்க முடிகிறன்றது. ஊடக தர்மத்தையும், ஊடக ஒழுக்கத்தையும் பின்பற்றி அதனையொட்டி செயற்படக்கூடிய ஓர் சிறந்த ஊடகமாக பிறைநிலா ஊடகத்தினை குறிப்பிடலாம்.
பக்கச்சார்பற்ற வகையில் தனிநபர் திறன்களையும், சிந்தனைகளையும் வளர்க்கும் ஊடகமாகவும், உண்மைத்தன்மையான தகவல்களையும், செய்திகளையும் வெளிக்கொணரக் கூடியதாகவும், பலதரப்பட்ட சமூகப் பணிகளையும், பொதுநலன்களையும் மேற்கொள்ளும் ஊடகமாகவும் பிறைநிலா ஊடகம் காணப்படுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது.

இன்றைய கால கட்டத்தில் மக்களால் உணரப்படும் ஊடகத் தேவைக்கான சிறந்த உதாரணமாக பிறைநிலா ஊடகம் திகழ்கின்றது. பாரம்பரியமான ஊடகப்போக்கில் இருந்து விடுபட்டு கொள்கைகளுக்காக செயற்பட்டு சமூக சிந்தனையில் தாக்கம் செலுத்தி தனி மனித சிந்தனைப் பாங்குகளை வளர்க்கும் தளமாக பிறைநிலா ஊடகம் திகழ்கின்றது. இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக வருடா வருடம் ரமழான் மாதத்தில் நடாத்தப்படும் பிறைநிலா கேள்வி உலா மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு நடாத்திய “பெண்” எனும் தலைப்பிலான ஹைக்கூ கவிதைப் போட்டி, நாடு பூராகவும் இடம்பெற்ற வரும் செய்தி வாசித்தல் பயிற்சிப் பட்டறை போன்ற செயற்றிட்டங்களையும் மேற்கொண்டுள்ளது எனலாம். சமாதான ஊடகம் தான் இனிவரும் காலங்களில் உணரப்படும் ஊடகத்தின் தேவையாக உள்ளது.

இன ஒற்றுமை, சகோதரத்துவம், புரிந்துணர்வு இதையே சகல மதங்களும் போதிக்கின்றன. எனவே, “பிறைநிலா” ஊடக வலையமைப்பும் அதற்கான நகர்வுக்காகத் தயாராகி தன்னை ஊடக தர்மத்துடன் கொண்டு செல்கின்றது எனலாம். இதற்கான சிறந்த உதாரணமே, மலையகத்தில் பிரமாண்டமாய் நடைபெற்ற பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியாகும்.
மக்கள் விரும்புவதை மட்டுமல்ல, மக்களுக்குத் தேவையான விடயங்களையும் உண்மைத் தன்மையுடன் வழங்கவதுதான் ஊடகத்தின் பணி. இப்பணியை பிறைநிலா ஊடகம் தவறாமல் மேற்கொள்கின்றது. இவ்வாறாக ஓர் சிறப்பான மாற்று ஊடகமாக பிறைநிலா ஊடகம் செயற்படுகின்றது.

மக்களின் சிந்தனைத் தளத்துக்குள் ஊடுருவி அதில் செல்வாக்குச் செலுத்தி சார்புத் தன்மை ஒன்றை உருவாக்கி அவர்களை இயக்குகின்ற சக்தியாக இன்றைய நவீன ஊடகங்கள், தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறது என்பதே சமகால ஊடகங்களின் செயற்பாடுகளும் மக்களின் நிலையும் என்ற யதார்த்தமாகும். இதை மறுப்பதற்கான மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஊடகவியலாளர்களின் பொறுப்பும் பணியும் நேர்த்தியாக முன்னெடுக்கும் போது ஊடக ஜனநாயகம் பாதுகாக்கப்படும். மாறாக அந்தப் பொறுப்பை மறந்து செயற்படுவது ஊடக தர்மத்தையும் அதன் ஜனநாயகத்தையும் கேள்விக்குட்படுத்துவதோடு தேசத்திற்கும், சமூகத்திற்கும் செய்யும் துரோகமாகக் கருதப்படவும் கூடும் என்பதையும் மறுதலிக்க முடியாது.

ஆகவே, ஊடகங்களை சமூக மாற்றத்திற்கும் ஆன்மீக மறுமலர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். ஊடக ஆன்மீகத்தை வளர்த்து இச் சமூகத்தில் பரவிக் கிடக்கும் தீமைகளைக் களைந்து வேற்றுமைகளை ஒழித்து ஒற்றுமையை வளர்க்க வேண்டும். ஊடகங்கள் மூலமாக மனித மாண்பும், அறநெறியும் வளர வேண்டும். ஊடகங்களைத் தீர்மானிக்கும் சக்தியாக மக்களை உருவாக்க வேண்டும். ஊடக தர்மத்தையும், ஊடக ஒழுக்கக் கோவையும் பின்பற்றும் ஊடகம் உணரப்படும் ஊடகத்தின் தேவையாக உள்ளது. சிறந்ததோர் ஊடகத்துக்கான எடுத்துக்காட்டாகவும் பிறைநிலா ஊடகம் காணப்படுகின்றது எனலாம். இதனுடைய வளர்ச்சி இன்னும் உயர்ந்த மட்டத்தை அடைய வேண்டும். இனிவரும் காலங்களில் சமூக சிந்தனையில் தாக்கம் செலுத்தி சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய ஓர் மாற்று ஊடகமாகவும், மக்களால் உணரப்படும் ஊடகத்துக்கான ஒன்றாகவும் பிறைநிலா ஊடகம் காணப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனலாம்.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

எரிபொருள் விநியோகம் வரையறை – அரசு விசேட அறிவிப்பு

பிறைநிலாவின் கூற்றுப் பேசினால் மட்டுமே ஊற்றுப் பேனா முகம் மலரும்!…