in , ,

சிரியாவில் தற்காலிக போர்நிறுத்தம் வந்தது

உள்நாட்டுப் போருக்கு சுமார் 3 லட்சம் உயிர்களை பறிகொடுத்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டின்படி சிரியா நாட்டில் இன்றுமுதல் தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.
மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் அதிபர் ஹபீஸ் அல் ஆசாத் தொடர்ந்து 29 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினார். 
அவர் 2000-ம் ஆண்டு மறைந்த பின்னர், அவரது மகனான பஷர் அல் ஆசாத் அதிகாரத்துக்கு வந்தார். 16 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல் நடந்தபோது எதிர்ப்பின்றி 99 சதவீத ஓட்டுக்களை கைப்பற்றி வெற்றி பெற்ற அவர், பின்னர் நடந்த தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றார்.

பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்பட சுமார் மூன்று லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 80 லட்சம் மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி ஜோர்டான், மற்றும் லெபனான் உள்ளிட்ட பல அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 3-6-2014 அன்று நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் 73.42 சதவீதம் அளவுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் 88.7 சதவீதம் வாக்குகளை பெற்று பஷர் அல் ஆசாத் மீண்டும் வெற்றி பெற்றார். இதன் மூலம் சிரியாவின் அதிபராக தனது பதவியை மூன்றாவது முறையாக பஷர் அல் ஆசாத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்
இருப்பினும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக மக்களும், மக்கள் ஆதரவு புரட்சிப்படையினரும் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 
சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷியாவும், கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவாக அமெரிக்காவும் உள்ள நிலையில் அரசுக்கும் எதிர்ப்பு குழுக்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தால்தான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும் என்பதால் ஐக்கிய நாடுகள் சபையின் யோசனைப்படியும், அமெரிக்காவின் தலையீட்டினாலும் இருதரப்பினருக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அரசுதரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. எனினும், எதிர்ப்பு குழுக்கள் இந்த பேச்சுவார்த்தையை நிராகரிப்பதாக அறிவித்திருந்தன. இந்நிலையில், சிரியாவில் உள்ள முக்கிய எதிர்ப்பு குழுக்களின் தலைவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அவர்களை வலியுறுத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். இதையடுத்து, இன்று ஜெனிவா நகரில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க சிரியா அரசுக்கு எதிரான குழுக்கள் சம்மதம் தெரிவித்தன.
சிரியாவில் அமைதி நிலவ நிரந்தர தீர்வை ஏற்படுத்துவது தொடர்பாக ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் 17 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.
கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரியா அரசு அதிகாரிகள் இடையே நேரடியாக அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வடிவமைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அமெரிக்க, ரஷியா, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பலமிக்க 17 நாடுகள் நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் சிரியாவில் நிரந்தர அமைதி ஏற்பட அரசியல்ரீதியான தீர்வை முன்னெடுத்து செல்ல வசதியாக சிரியா ராணுவம் மற்றும் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தனிநபர் போராளி குழுக்கள் மற்றும் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ஹெஜ்புல்லா இயக்கப் போராளிகள் மற்றும் ரஷியா ஆதரவுப் படைகள் உள்பட அனைத்து தரப்பினரும் வெள்ளைக் கொடியை ஏந்தி போரை கைவிட வேண்டும். இருதரப்பினரும் தங்கள்வசம் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு மேற்கண்ட 17 நாடுகளும் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அங்கு தடைப்பட்டுள்ள மனிதநேய நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிவாரண உதவிகள் மிக அவசரமாக தேவைப்படும் இடங்களிலும், போராளிகளால் கைப்பற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கும் நிவாரண உதவிகளை அனுப்பும் பணிகள் தொடங்கின.
இதையடுத்து, அமெரிக்காவும், ரஷியாவும் சேர்ந்து உருவாக்கி கையொப்பமிட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்ம் ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) நேற்று பின்னிரவு 12 மணியில் இருந்து இங்குள்ள டமாஸ்கஸ், அலெப்போ, அல் கலாசே, ஜோபர் உள்ளிட்ட முந்தைய போர்க்களப் பகுதிகள் இன்று காலையிலிருந்து அமைதியாக காணப்படுகின்றன.
எனினும், தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறிக்கொண்டு ரஷிய விமானப்படைகள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால் இந்த அமைதி சீர்குலைந்து மீண்டும் போர் பதற்றம் உருவாகலாம் என நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பாலஸ்தீனுக்கு 780 மில்லியன் டாலர் ஒதுக்கீடு : ஜப்பான் அரசு அறிவிப்பு….!!

ஆடையில்லா மனிதன்…