
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று திங்கட்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது.
புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றார்.
பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக கடந்த வியாழக்கிழமை (8) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
தேசியத் தேவையை நிறைவேற்றுவதற்காக, ஜனாதிபதியினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு தன்னால் முடியுமான அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் இதன் போது உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (DC)