
B.M.பயாஸ் (ஊடகவியலாளர்)
மட்டக்களப்பு மத்திய வலயத்திற்குட்பட்ட மட்/மம/ நூரானியா வித்தியாலயத்தில் ஆரம்ப மற்றும் இடை நிலைப் பிரிவு கல்வியினை கற்று உயர் கல்வியினை அண்மையில் உள்ள உயர் தர பாடசாலையில் கற்று கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் சித்திபெற்று பல்கலைக்கழகம் தெரிவாகி கல்லூரிக்கும் மத்திய வலயத்திற்கும் மாவட்டத்திற்கும் நற்பெயர் பெற்றுத்தந்த 18 மாணவ மாணவிகளையும் கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் நூரானியா வித்தியாலயத்தில் சித்திபெற்ற மாணாக்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் இன்று காலை இடம் பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சீ.எம். நியாஸ் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம். ஸெய்யித் உமர் மௌலானா பிரதம அதிதியாக பங்கேற்றதுடன் வைபவத்தில் கௌரவ அதிதியாக நூரானியா வித்தியாலயத்தின் பழைய மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ பதிவாளர் டொக்டர் இஸ்ஸதுன் நிஷா பங்கேற்று சிறப்பித்தார்.
இதேவேளை காத்தான்குடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் உள்ளிட்ட கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.
இதன் போது வணிகத்துறையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம் பெற்ற மாணவி எப்.பஸ்னா, ஆறாம் இடம் பெற்ற எம்.எம்.எம். சஹ்னாஸ், பதினைந்தாம் இடம் பெற்ற ஜே.எப்.சுஹாதா உள்ளிட்ட பதினெட்டு பேர் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் நிகழ்வின் பிரதம மற்றும் கௌரவ அதிதிகளும் பாடசாலை சமூகத்தினால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












