in ,

ட்விட்டர் சமூகத் தளம் விலை போனது – மோதலின் முடிவும் வெளியானது

உலகின் பெரும் செல்வந்தரான இலோன் மாஸ்க் 44 பில்லியன் டொலருக்கு ட்விட்டர் சமூகத் தளத்தை வாங்குவதை பூர்த்தி செய்திருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டதை குறிக்கும் வகையில் மாஸ்க், “பறவை விடுவிக்கப்பட்டது” என்று ட்விட் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ட்விட்டர் தலைவர் பரக் அக்ரவால் உட்பட பல நிறைவேற்று உறுப்பினர்களும் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் ட்விட்டர் மற்றும் மாஸ்க்கிற்கு இடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. பல பில்லியன் டொலருக்கு ட்விட்டரை வாங்க சில மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்த மாஸ்க், அதில் இருந்து வெளியேற முயன்ற நிலையில் ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றம் சென்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் நிறுவனத்தை மாஸ்க் கையகப்படுத்தியதை ட்விட்டர் இன்னும் உறுதி செய்யாதபோதும், உடன்படிக்கை நிறைவு செய்யப்பட்டது என்று நிறுனத்தின் முதலீட்டாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

கருத்துச் சுதந்திரம் தொடர்பில் தனித்துவ எண்ணத்தைக் கொண்டவர் என கருதப்படும் மாஸ்க், ட்விட்டரின் மிதவாதக் கொள்கைகளை விமர்சித்து வந்தார். இந்நிலையில் அவர் ட்விட்டரை கைப்பற்றி இருப்பது ட்விட்டர் பயனர்கள் மற்றும் ஊழியர்களிடையே கவலையான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் அமெரிக்க அரசியலில் வலதுசாரிகள் அக்ரவாலின் வெளியேற்றத்தை கொண்டாடுவார்கள். மிதவாதிகளான அக்ரவால் மற்றும் அவருக்கு முன்னர் இருந்த ஜன் டோர்சே பேச்சு சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதாக அவர்கள் கருதுகின்றனர்.

பழைமைவாதக் குரலை ட்விட்டர் ஒடுக்குவதாக வலதுசாரிகள் குற்றம்சாட்டியபோதும் ட்விட்டர் அதனை மறுத்து வருகிறது.

அக்ரவாலுடன் தலைமை நிதி அதிகாரி நெட் செகால் மற்றும் நிறுவனத்தின் சட்டம் மற்றும் கொள்கை நிர்வாகி விஜெய் கட்டே ஆகியோர் தொடர்ந்தும் ட்விட்டரில் இல்லை என்று அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

உடன்படிக்கை பூர்த்தியானதை அடுத்து சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் ட்விட்டர் தலைமையகத்தில் இருந்து அக்ரவால் மற்றும் செகால் இருவரும் வெளியேற்றப்பட்டனர் என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்ரவால், செகால் மற்றும் கட்டேவின் பங்களிப்புக்காக ட்விட்டர் இணை நிறுவனர் பிஸ் ஸ்டோன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த நவம்பர் தொடக்கம் ட்விட்டர் தலைவராக பணியாற்றிய பிரெட் டெய்லர், தொடர்ந்தும் தான் அந்தப் பதவியில் இல்லை என்று தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை ட்விட்டர் சமூக ஊடகத்தின் பங்குகள் இடைநிறுத்தப்பட்டதாக நியூயோர்க் பங்குச் சந்தை இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

மனிதாபிமானத்திற்கு உதவ தாம் சமூக ஊடகத்தை வாங்கியதாகவும் பொதுவான டிஜிட்டல் மையம் ஒன்றை கொண்டுவர விரும்புவதாகவும் மாஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் வெறுப்புப் பேச்சு மற்றும் தவறான தகவல்களை வழங்கியதற்காக ட்விட்டரில் தடை விதிக்கப்பட்ட பலரும் மீண்டும் அந்த சமூக ஊடகத்திற்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான ட்விட்டர் தடையும் தொடர்ந்து நீடிக்கிறது. எனினும் இந்தத் தடை முட்டாள்தனமானது என்றும் மீளப்பெறப்பட வேண்டும் என்றும் மாஸ்க் முன்னதாக கூறியிருந்தார்.

ட்விட்டர் பற்றிய தனது திட்டம் குறித்து பதிவிட்டிருந்த மாஸ்க், அனைத்துக்குமான செயலியாக ட்விட்டரை மாற்றுவது பற்றி தெரிவித்தார்.

இது பெரும் வெற்றி அளித்திருக்கும் சீனாவின் செயலியான ‘விசாட்’ போக்கில் அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயலி செய்தியிடல், சமூக ஊடகம், கொடுப்பனவுகள் மற்றும் உணவு கோரல்கள் உட்பட பல்வேறு சேவைகளை வழங்குவதாக அமையும். (TK)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

2023-ல் Google Chrome இயங்காதா? வைரலாகும் உண்மைத் தகவல்

அவ்ளோ தான், Twitter-ஐ மறந்துடுங்க