in

தென்கொரியாவில் உயிரிழந்த உடதலவின்ன சகோதரன் ஜினத் – குடும்பத்தினரின் வாக்குமூலம்

தென்கொரிய நாட்டின் சியோல் நகரில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்களுள் இலங்கையைச் சேர்ந்தவரும் அடங்குகின்றார். கண்டி மாவட்டத்தின் உடத்தலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஜினத் என்பவரே அவராவார்.

“ஜினத் என்ற இளைஞரை 24 வயதுடைய எனது மகள் பாத்திமா சப்னாவுக்கு திருமணம் செய்து வைத்தேன். இவர்களது திருமண நிகழ்வு முடிந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகின்றன. எனது மகள் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், அவரின் பிரிவால் எங்கள் குடும்பமே துயரில் மூழ்கியுள்ளது” என்று கூறுகின்றார் மரணமான இளைஞரின் மனைவியின் தந்தையார்.

உயிரிழந்துள்ள ஜினத்தின் மனைவி பாத்திமா சப்னாவின் தந்தை முகம்மட் உமர் கண்டியில் உள்ள வெளிவிவகார அமைச்சின் கண்டி கொன்சியுலர் அலுவலகத்திற்குச் சென்று தனது மருமகனின் உடலை விரைவில் இலங்கைக்குக் கொண்டுவர உதவி செய்யுமாறு கடிதமொன்றை கையளித்துள்ளார். அப்போது ஜினத்தின் தந்தை, தாய், மனைவி மற்றும் மாமா ஆகியோர் உடனிருந்தனர்.

முகம்மது உமர் அங்கு கூறுகையில் “என் மருமகனுக்கு என்ன நடந்தது என்று எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாமல் உள்ளது. எங்களில் யாருக்கும் நிலையான வருமானம் இல்லை. அவர் தனக்கு குழந்தை பிறந்ததும் அக்குழந்தையைப் பார்ப்பதற்கு ஆவலாக இருந்தார். அவரது உடலையாவது நாட்டுக்குக் கொண்டு வர முடிந்தால், அது பெரிய உதவியாக இருக்கும். அதற்கு அரசு உதவும் என்று நம்புகிறோம்” என்றார்.

தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்வின் போது உடல் நசுங்கி உயிரிழந்த வாலிபர் முகமமது ஜினாத்தின் தந்தை பீ.ஐ.எம். முனவ்வர் (வயது 64) கூறுகையில், “மூன்று மாதங்களுக்கு முன்பு இலங்கை வந்த எனது மகனுக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகின்றது. எங்களையும் உள்வாங்கிக் கொண்டு நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை மகனது கனவாக இருந்தது.

சியோலில் இடம்பெற்ற சம்பவத்தின்பொழுது சனநெரிசல் காரணமாக மக்கள் பலர் இறந்ததாக கூறப்பட்டாலும், அவர்களில் எனது மகனும் இருப்பதாக நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. என் மகன் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கொரியாவுக்கு புறப்படும் வேளை எங்கள் அனைவரையும் கட்டித்தழுவி பிரிந்து சென்ற காட்சி இன்னும் என் கண்முன்னே நிழலாடுகின்றது. இப்போது எமக்கு இருக்கும் ஏக்கம் உயிரிழந்த எனது மகனின் உடலை இலங்கைக்கு கொண்டு வந்து எங்களிடம் சேர்ப்பதுதான் அரசு செய்யும் பெரும் உதவியாக அது இருக்கும்” என்று வேதனையுடன் தெரிவித்தார் .

தந்தை முனவ்வர் மேலும் கூறியதாவது:

“எனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நானும் நோயாளிதான். எங்களுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களில் மூன்று பேர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவர். தற்பொழுது கொரியாவில் உரிழந்துள்ளவர் எனது இரண்டாவது மகன் ஆவார். அவர் கொரியாவிலிருந்து இரண்டு வருடங்களின் பின்னர் இலங்கை வந்தார். எங்களுக்கு நிறைய பொருளாதார பிரச்சினைகள் இருந்தன. அதனால்தான் என் மகன் கொரியா சென்றான்.

எங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உருவாக்குவதே எனது மகனின் எண்ணமும் ஆசையுமாக இருந்தது. எனது வைத்தியச் செலவுக்கு பணம் அனுப்புவார். ஏனைய வீட்டு விடயங்களை கேட்டறிவார்” எனவும் தந்தை தெரிவித்தார்.

உயிரிழந்த முனவ்வர் முகம்மது ஜினாத்தின் மூத்த சகோதரர் எம்.எம்.முஜாஹித் கூறியதாவது:

“என் தம்பி எனது மாமன் மகளை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது முறை வெளியூர் போன பிறகு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எனது தம்பி என்னுடன் தொலைபேசியில் உரையாடுவது வழக்கம். இரண்டு வருடம் வேலை பார்த்த இடத்தை விட்டு புது இடத்துக்கு வேலைக்குப் போனார்.

இறுதியாக 29 ஆம் திகதி காலை 10 மணியளவில் அவர் என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். அவர் தனது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை சர்வதேச தரத்திலான அந்நாட்டுக்குரிய அனுமதிப்பத்திரமாக மாற்ற விரும்புவதாகக் கூறினார். தாயின் நோய், தந்தையின் உடல்நிலை பற்றியும் அடிக்கடி விசாரித்துக் கொள்வார்.

எனது சகோதரன் வெளிநாடு செல்வதற்கு முன்பு மொபைல் போன் மற்றும் சிம் விற்பனை போன்ற வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவ்வாறு நடைபாதையில் குடை பிடித்து சிம் கார்ட்களை விற்று தொழில் புரிந்து வந்தவர், பின்னர் தொலைபேசி வியாபாரத்தை ஆரம்பித்தார்.

அப்போது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. செலவுகள் அதிகரித்ததால், வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைத்தார். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அவர் தனது விசாவை புதுப்பிக்க செல்வார். தம்பியின் விசா முதல் திகதியுடன் முடிவடைய இருந்தது. என் தம்பி அந்த வேலையைப் பார்க்கப் போய் இருந்துள்ளார். அங்கு ஒரு நண்பன் மூலம் தனது விசாவைப் புதுப்பிப்பதற்காக ஒரு வழக்கறிஞரைச் சந்திப்பதற்காக வேலை செய்யும் இடத்திலிருந்து ரயிலில் சென்றுள்ளார். இந்நிலையிலேயே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளதாகவே அறியமுடிகின்றது.

இந்நிகழ்வை கண்டு கழிக்க வருடத்துகொருமுறை 30 தொடக்கம் -40 ஆயிரம் மக்கள் வருவார்கள் என்று அறிந்தேன். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தலைநகர் சியோலில் ஹாலோவீன் விழா கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்டதால், இம்முறை சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் இதில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது”.

இவ்வாறு சகோதரர் கூறினார்.

எம்.ஏ.அமீனுல்லா… (TK)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அவ்ளோ தான், Twitter-ஐ மறந்துடுங்க

மாகொல அநாதை இல்லத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க மல்வானையில் ஆர்ப்பாட்டப் பேரணி