
ஆப்கானிஸ்தான் அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பெண்களுக்கான பல்கலைக்கழக நுழைவு இடைநிறுத்தப்படுவதாக அந்நாட்டு கல்வி அமைச்சு அறிவிப்பு விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து ஏற்கனவே இடைநிலை பாடசாலைகளில் இருந்து பெண்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் பெண் கல்விக்கு மேலும் கட்டுப்பாடு விதிக்கும் நடவடிக்கையாக இது உள்ளது.
இந்த அறிவிப்பு பெரும் வருத்தத்தைத் தருவதாக ஐ.நா பேச்சாளர் குறிப்பிட்டிருப்பதோடு ஐ.நா பாதுகாப்புச் சபை சந்திப்பின்போதும் இந்த முடிவுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தூதுவர்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தடையை நியாயப்படுத்திப் பேசிய தலிபான்கள், தேசிய நலன் மற்றும் பெண்களின் கெளரவத்திற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தடையை தொடர்ந்து அண்மையில் பல்கலைக்கழகங்களுக்குச் சென்ற மாணவிகள் நுழைவாயிலில் வைத்து தடுக்கப்பட்டுள்ளனர். தலைநகர் காபுலில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வெளியே ஹிஜாப் அணிந்த பெண்கள் திரண்டிருப்பதை பார்க்க முடிந்ததாக அங்கிருக்கும் ஏ.எப்.பி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மாணவிகள் நுழைவதை தடுத்த ஆயுதமேந்திய காவலர்கள் நுழைவாயிலை மூடியுள்ளனர். (TKN)