
முன்னாள் அமைச்சரும், முதலமைச்சரும், ஆளுநருமான ரெஜினோல்ட் குரே காலமானார்
மரணிக்கும் போது அவருக்கு வயது 75ஆகும். பாராளுமன்ற தகவல் திரட்டுக்கு அமைய ரெஜினோல்ட் குரேவின் பிறந்த தினம் 1947ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி ஆகும்.
முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே நேற்று (12) இரவு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

ரெஜினோல்ட் குரே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையில், வெகுஜன ஊடக அமைச்சராகவும், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சராகவும், விமானப் போக்குவரத்து அமைச்சராகவும், நீதி பிரதியமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
அத்துடன், மேல் மாகாணம், வடமாகாணம் ஆகியவற்றின் ஆளுநராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

இது தவிர தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் தலைவராகவும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு கட்சிக்கு தனது ஆதரவை வழங்கிய ரெஜினோல்ட் குரே, அதனைத் தொடர்ந்து மீண்டும் சுதந்திரக் கட்சியுடன் இணைந்ததோடு, மரணிக்கும் போது ஶ்ரீ.ல.சு.க.வின் களுத்துறை மாவட்ட தேர்தல் அமைப்பாளராக பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (TKN)
