
க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் போது மின்வெட்டுக்களை ஏற்படுத்த வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பரீட்சார்த்திகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் உயர்தர காலத்தில் மின்வெட்டுகளை அமுல்படுத்த வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் PUCSL யிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பிள்ளைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

A/L பரீட்சை காலத்தில் தேவையை குறைப்பதற்காக இரவு நேரங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களையும் அவர் கேட்டுக்கொண்டார் (NW)